

உலகின் மிக முக்கியமான மனித உரிமைச் சட்டமாக குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) கருதப்பட வேண்டும் என்று பாஜகவின் எம்.பியும் திரைப்படக் கலைஞருமான ரூபா கங்குலி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தேசிய விருதுபெற்ற நடிகை ரூபா கங்குலி திரௌபதியாக நடித்து புகழ்பெற்றவர். பி.ஆர். சோப்ராவின் பிரமாண்டமான தொலைக்காட்சி தொடரான மகாபாரதத்தில் திரௌபதியாக நடித்ததன்மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். அதன்மூலம் அரசியலிலும் களமிறங்கினார். தற்போது பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.
ஒடிசாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரூபா கங்குலி தனது பயணத்தின்போது, கிழக்கு பாகிஸ்தானில் இருந்து வந்து மல்கான்கிரி மற்றும் நபரங்க்பூர் மாவட்டங்களில் குடியேறியுள்ள அகதிகளை சந்தித்தார். அதன் பின்னர் சிஏஏவுக்கு ஆதரவாக பாஜக ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசினார்.
கூட்டத்தில் ரூபா கங்குலி பேசியதாவது:
"இந்த விவகாரத்தில் அனைத்து கூச்சல்களும் கூக்குரல்களும் இருந்தபோதிலும், சிஏஏ மனிதநேயத்தை வலியுறுத்துகிறது என்பது உண்மை. இது உலகின் மிக முக்கியமான மனித உரிமைச் சட்டம் என்று வர்ணிக்கலாம். சித்திரவதை செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்ட பின்னர் இங்கு வரும் மக்களுக்கு குடியுரிமை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
எந்த வகையிலும், சிஏஏ இந்திய குடிமக்கள் மீது எந்தவிதமான மோசமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது. குறுகிய அரசியல் நோக்கத்திற்காக எதிர்க்கட்சிகள் பொய்களைபரப்புகின்றன, மக்களை தவறாக வழிநடத்துகின்றன''
இவ்வாறு ரூபா கங்குலி தெரிவித்தார்.