

கடும் நிபந்தனைகளுடன் வெளியே வந்துள்ள பீம் ஆர்மி தலைவர், நாடு முழுவதும் அடுத்த 10 நாட்களில் 5,000 இடங்களில் சிஏஏவை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் ஜூம்மா மசூதியில் போராட்டம் நடத்தியபோது ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் காரணமாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளார் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத். இந்திய அரசியலமைப்பு சட்டப் புத்தகத்துடன் சிஏஏவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, "வன்முறையைத் தூண்டும் பேச்சில் ஈடுபட்டதாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டார்.
சில தினங்களுக்குமுன் ஒரு மாதத்திற்கு எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் நடத்த அனுமதியில்லை உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் மருத்துவக் காரணங்களுக்காகவும் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்காகவும் ஒருமாதம் ஜாமீனில் டெல்லி நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
இந்நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, தெற்கு டெல்லியின் டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் ஒரு மாதத்திற்கும் மேலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண்களுக்கு நேரில் சென்று தனது ஆதரவை ஆசாத் அளித்துள்ளார்.
ஷாஹீன் பாக் பகுதியில் நடந்து வரும் ஆர்ப்பாட்டத்தில் சாதி, மதம், அமைப்புகள் சார்பின்றி அனைத்துப் பிரிவினரும் இப்போராட்டத்தில் பங்கெடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
சிஏஏவுக்கு எதிரான பெண்களின் போராட்டத்தில் கலந்துகொண்ட சந்திரசேகர் ஆசாத் கூறியதாவது:
''குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பது ஒரு கறுப்புச் சட்டமாகும். இது மக்களை மத அடிப்படையில் பிரிக்கிறது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்களை நான் வாழ்த்துகிறேன். இது ஒரு அரசியல் கிளர்ச்சி மட்டுமல்ல. அரசியலமைப்பையும் தேசத்தின் ஒற்றுமையையும் நாம் காப்பாற்ற வேண்டும் என்ற தேச ஒற்றுமையைக் காட்டும் போராட்டமுமாகும்.
ஒருவேளை மத்திய அரசு சிஏஏவை செயல்படுத்த நினைத்தால் எங்கள் சடலங்களைக் கடந்துசென்றுதான் அவர்கள் செயல்படுத்த வேண்டியிருக்கும்.
டெல்லியில் 112 ஆண்டுகளில் இல்லாத குளிர் வீசிக்கொண்டிருக்கும் வேளையிலும் பெண்களின் போராட்ட சக்தியை உடைக்க முடியவில்லை. உங்கள் உறுதியிலிருந்து நீங்கள் பின்வாங்கவில்லை.
உங்கள் நேர்மை மற்றும் மன உறுதியால், நாட்டில் 1,000 ஷாஹீன் பாக்கள் உருவாகி வருகின்றன. இந்த அரசாங்கத்தைத் தட்டி எழுப்புவதறக்காக நமக்குத் தேவை 1 லட்சம் சாஹீன் பாக்கள். இந்தியாவின் ஒற்றுமைக்காகப் போராடவும், ஒவ்வொரு திடலையும் ஷாஹீன் பாக்காக மாற்ற வேண்டுமென பெண்களை கேட்டுக்கொள்கிறேன்.
பிரதமர் டெல்லியில் வசிக்கிறார். அவர் உலகம் முழுவதும் உள்ளவர்களுடன் பேசுகிறார். ஆனால், ஷாஹீன் பாக்கில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண்களின் குரல் அவருக்கு ஏன் கேட்கவில்லை?
மக்கள் இயக்கத்துடன் வெள்ளை ஆங்கிலேயரை நாம் வெளியேற்றினோம். அதேபோல தற்போது அரசாங்கம் நடத்திவரும் கறுப்பு ஆங்கிலேயரையும் வெளியேற்றுவோம்.
அடுத்த நாட்களில் நாடு முழுவதும் குறைந்தது 5,000 ஷாஹீன் பாக் போராட்டங்களை பீம் ஆர்மி நடத்தும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்''.
இவ்வாறு பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் தெரிவித்தார்.