

மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ஆதித்யா ராவ் என்பவர் நேற்று பெங்களூரு போலீஸாரிடம் சரணடைந்தார். அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவருக்கு உளவியல் பிரச்சினை இருப்பதாகக் குடும்பத்தினர் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலம் மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கடந்த திங்கள்கிழமை காலையில் பை ஒன்று கிடந்தது. அதனைப் பரிசோதித்து பார்த்ததில் சக்தி குறைந்த வெடிகுண்டும், குண்டு தயாரிப்பதற்குத் தேவையான வெடிப்பொருட்களும் இருந்தன. இதனைக் கைப்பற்றிய தேசிய பாதுகாப்புப் படையினர், காலியான இடத்தில் அதனை வெடிக்கச் செய்தனா். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மங்களூரு போலீஸார், 3 தனிப்படைகளை அமைத்து குற்றவாளியைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் சிசிடிவி கேமிராவில் பதிவான குற்றவாளியின் புகைப்படத்தையும், அவர் விமான நிலையத்துக்கு வந்த ஆட்டோவின் பதிவு எண்ணையும் வெளியிட்டனர். இதையடுத்து நேற்று முன் தினம் மாலை ஆட்டோ ஓட்டுநர் மஞ்சுநாத் தாமாக முன்வந்து போலீஸில் சரண் அடைந்தார். தனது ஆட்டோவில் பயணித்தவர் உடுப்பியைச் சேர்ந்தவர் என்றும், துளு மொழியை பேசியதாகவும் தெரிவித்தார்.
எனவே தனிப்படை போலீஸார் மங்களூரு, உடுப்பி, கோவா,கேரளா ஆகிய இடங்களில் தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்நிலையில் நேற்று ஆதித்யா ராவ் என்பவர் பெங்களூருவில் காவல்துறை டிஜிபி நீலமணி ராஜூ, பெங்களூரு மாநகர காவல் ஆணையர் பாஸ்கர் ராவ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் முன்னிலையில் சரண் அடைந்தார். அவரிடம் மங்களூரு வெடிகுண்டு வழக்கு குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.
இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில், ''சரணடைந்திருக்கும் ஆதித்யா ராவ் மங்களூரு விமான நிலையத்துக்கு வெடிகுண்டு வைத்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
அவருக்கும் எந்த தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பு இல்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுப்பினரான இவர் பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளுடன் தொடர்பு வைத்துள்ளார். வேலை கிடைக்காத விரக்தியில், யூ டியூப் பார்த்து வெடிகுண்டு தயாரித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
எம்பிஏ பட்டதாரியான ஆதித்யா ராவ் தனக்கு வேலை கிடைக்காத விரக்தியில் குண்டு வைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதற்கு முன் கடந்த 2017ம் ஆண்டு பெங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததற்காக கைது செய்யப்பட்டு, பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி பெங்களூரு ரயில் நிலையத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கிலும் கைதாகியுள்ளார்.
ஆதித்யா ராவுக்கு உளவியல் ரீதியான பிரச்சினை இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவ்வழக்கில் உரிய முறையில் விசாரணை நடத்தப்படும்'' என்றனர்.