Last Updated : 23 Jan, 2020 12:45 PM

 

Published : 23 Jan 2020 12:45 PM
Last Updated : 23 Jan 2020 12:45 PM

ராமர் சேது பாலம்: சுப்பிரமணியன் சுவாமி மனுவை 3 மாதங்களுக்குப் பின் பரிசீலிக்கிறோம்: உச்ச நீதிமன்றம்

ராமர் சேது பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி பாஜக மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை 3 மாதங்களுக்குப் பின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்தது.

ஆடம் பிரிட்ஜ் என அழைக்கப்படும் ராமர் சேது பாலம் தமிழகத்தின் பாம்பனுக்கும், இலங்கையின் மன்னார் தீவுக்கும் இடையே கடலுக்குள் 35 கி.மீ. நீளம் அமைந்துள்ளது. கடலில் ஆழமற்ற மற்றும் மணல் திட்டுப் பகுதியிலும் உருவாகியுள்ளது. தண்ணீருக்குள் 100 மீட்டர் அகலம் மற்றும் 10 மீட்டர் ஆழத்தில் உள்ளது. முற்றிலும் சுண்ணாம்புக் கற்களால் இந்தப் பாலம் உருவாக்கப்பட்டுள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி : கோப்புப்படம்

இந்நிலையில் பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை இன்று தாக்கல் செய்தார். அதில், ''ராமர் சேது பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக மத்திய அரசின் தொல்லியல் துறை அமைப்பு மூலம் அறிவிக்க உத்தரவிட வேண்டும்.

ராமர் சேது பாலம் இருக்கிறது என்பதை மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது என்பதை ஏற்கெனவே நான் தாக்கல் செய்த மனுவுக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. ஆனால், 2017-ம் ஆண்டில் நடந்த கூட்டத்தின்போது ராமர் சேது பாலத்தை தேசிய பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். ஆனால் அப்போது ஏதும் நடக்கவில்லை.

இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும்’’ எனக் கோரித் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் எஸ்.ஏ.நசீர், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள், "உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இந்த மனுவை நீங்கள் 3 மாதங்களுக்குப் பின் தாக்கல் செய்யுங்கள். அப்போது இதைப் பரிசீலிக்கிறோம்" எனத் தெரிவித்தனர்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, சேது சமுத்திரம் கால்வாய் திட்டப்பணியின் போது, ராமர் சேது பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மனுத்தாக்கல் செய்திருந்தார்

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 2007-ம் ஆண்டு சேது சமுத்திரத் திட்டப் பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்த மத்திய அரசு, இந்தத் திட்டத்தில் சமூகப் பொருளாதார குறைபாடுகள் இருக்கின்றன. ராமர் சேது பாலத்தைச் சேதப்படுத்தாமல் திட்டத்தை நிறைவேற்ற மாற்றுவழியைக் காண்போம் எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x