

லலித் மோடி விசா பெற உதவியதாக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து அமளி ஏற்படுத்தி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முடக்கிவரும் நிலையில், மக்களவையில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் புதன்கிழமை விளக்கமளித்தார்.
முன்னதாக, காங்கிரஸ் மக்களவை தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இத்தீர்மானத்தை அனுமதித்தார் மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன்.
இருப்பினும் 'மோடிகேட்' என்ற தலைப்பில் மக்களவையில் விவாதம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற காங்கிரஸ் கோரிக்கையை சுமித்ரா நிராகரித்தார். அதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், இவ்விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியது.
பின்னர் பகல் 12.45 மணியளவில் மக்களவை லலித் மோடி - சுஷ்மா ஸ்வராஜ் சர்ச்சை குறித்து மல்லிகார்ஜூன கார்கே கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை அனுமதித்து விவாதத்தை தொடக்கியது.
ஆனால், எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை 2.45 மணிக்கு கூடியது. அப்போது மக்களவையில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விளக்கமளித்தார்.
அவையில் விவாதம் நடத்துவதாகக் கூறிவிட்டு சுஷ்மா விளக்கமளிக்க அனுமதித்தது ஏற்கத்தக்கல்ல என காங்கிரஸார் கோஷம் எழுப்பினர். ஆனால், தொடர் கோஷத்துக்கு இடையேயும் சுஷ்மா விளக்கமளித்தார்.
அவர் பேசும்போது, "லலித் மோடி பாஸ்போர்ட் வழக்கில் என் கணவர் அவருக்கு வழக்கறிஞராக செயல்படவில்லை. லலித் மோடிக்கு 11 பேர் வழக்கறிஞர்களாக உள்ளனர். அவர்களில் எனது மகள் 9-வது இடத்தில் இளநிலை வழக்கறிஞராகவே இருக்கிறார். இதில் காங்கிரஸ் கட்சியினர் என்ன குற்றம் கண்டுபிடித்தனர் என்பது எனக்கு புரியவில்லை.
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி சாரதா நிதி நிறுவன மோசடியில் சிக்கினார். அப்போது, சிதம்பரம் அவரது துறை வாயிலாக தன் மனைவிக்கு ஒரு வழக்கறிஞரை நியமித்தார்.
லலித் மோடியிடம் நான் எவ்வளவு பணம் பெற்றேன் என ராகுல் காந்தி கேள்வி எழுப்புகிறாரே. அவர் அடுத்த முறை விடுப்பு எடுத்துச் செல்லும்போது தனது குடும்ப வரலாற்றை படித்துவிட்டு குட்ரோச்சியிடம் தனது குடும்பத்தினர் எவ்வளவு பெற்றனர் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறேன்.
நாட்டை விட்டு தப்பித்து ஓடிய லலித் மோடிக்கு சுஷ்மா ஸ்வராஜ் ஏன் ரகசியமாக உதவ வேண்டும் என ராகுல் கேள்வி எழுப்பியிருக்கிறார். லலித் மோடி தப்பி ஓடியதாக இந்நாட்டின் எந்த ஒரு நீதிமன்றமும் குறிப்பிடவில்லை. மேலும், காங்கிரஸ் ஆட்சியில்தான் இத்தாலியின் குவாட்ரோச்சி, அமெரிக்காவின் ஆண்டர்சன் ஆகியோர் தப்பி ஓடியிருக்கின்றனர். அதுவும் அரசு உதவியுடன் என்பதை மறந்துவிடக் கூடாது.
மல்லிகார்ஜூன கார்கே பேசும்போது இதற்கு முன்னதாக நான் அளித்த விளக்கத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டேன் என கூறியிருக்கிறார். நான் சொன்னதை அவர்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கின்றனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஓர் இந்தியப் பெண்ணுக்கு உதவியது குற்றமா என்றே நான் வினவியிருந்தேன். குற்ற உணர்ச்சியால் அதை நான் சொல்லவில்லை. நடந்ததை மட்டுமே விவரித்தேன்" என்றார்.