Last Updated : 23 Jan, 2020 08:52 AM

 

Published : 23 Jan 2020 08:52 AM
Last Updated : 23 Jan 2020 08:52 AM

‘வங்கதேச முகாம்' என்று பரவிய போலி வீடியோ காரணமாக பெங்களூரு நகரில் தவறுதலாக‌ இடிக்கப்பட்ட 300 வீடுகள்

பெங்களூரு

வங்க தேச முகாம் என போலியாக பரப்பப்ப‌ட்ட‌ வீடியோவின் காரணமாக மாநகராட்சி அதிகாரிகள் பெங்களூருவில் 300 வீடுகளை இடித்து தள்ளியுள்ளனர். வீடுகளை இழந்த இந்திய மக்கள் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் வசிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சமூக வலைதளங்களில் இந்த போராட்டங்களை ஆதரித்தும் எதிர்த்தும் ஏராளமான செய்திகள் வலம் வருகின்றன. இந்நிலையில் பெங்களூருவில் கடந்த சனிக்கிழமை பாஜகவினர் மத்தியில் வீடியோ ஒன்று வைரலானது.

அதில் பெல்லந்தூர் அருகே வங்கதேசத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்கானோர் சட்டவிரோதமாக வீடுகள் கட்டியும், குடிசைகள் அமைத்தும் வசிக்கின்றனர். இந்த‌ முகாமில் இருப்பவர்களால் அக்கம்பக்கத்தில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றச்செயல்கள் நடக்கின்றன. இவர்களால் எதிர்காலத்தில் பெரிய அளவில் தாக்குதல் சம்பவங்களும் நடத்தப்படலாம். இந்த வங்கதேச முகாமை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த வீடியோவை பாஜக எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவள்ளி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, வங்கதேச முகாமை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினார். இதையடுத்து பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அங்கிருந்த 300க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து தரைமட்டமாக்கினர். அங்கிருந்த மக்கள் தாங்கள் இந்தியர்கள் என்பதற்கான ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை காட்டியபோதும், அதிகாரிகள் அதனை ஏற்க மறுத்தனர்.

இந்நிலையில் வீடுகளை இழந்த இந்திய மக்கள் குறிப்பாக வடகர்நாடகா, தமிழகம்,தெலங்கானா, அசாம் ஆகிய பகுதிகளை ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது வீதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். கடந்த இரு தினங்களாக மாரத்தஹள்ளி சாலையின் இருபுறங்களிலும் குடிசைகள் அமைத்து வசிக்கின்றனர். இதுகுறித்து தகவலறிந்த சமூக ஆர்வலர்கள், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்கள் இந்தியர்கள் என்பதற்கான ஆதாரங்களை திரட்டியுள்ளனர்.

அதிகாரி மீது நடவடிக்கை

இதுகுறித்து சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி கூறியதாவது:

நாங்கள் பெங்களூரு மாநகராட்சி ஆணையர் லட்சுமி நாராயணாவை சந்தித்து, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் இந்தியர்கள் என்பதை தக்க ஆதாரங்களுடன் நிரூபித்து இருக்கிறோம். பாஜகவினர் பரப்பிய‌ போலி வீடியோவின் காரணமாக தவறுதலாக 300 வீடுகள் இடிக்கப்பட்டதை அவர் ஒப்புக்கொண்டார். எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி ஒரே நாளில் குடியிருப்பை அகற்றிய மாநகராட்சி துணைப் பொறியாளர் நாராயண சுவாமி பணி இடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக கூறினார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x