Last Updated : 22 Jan, 2020 09:42 PM

 

Published : 22 Jan 2020 09:42 PM
Last Updated : 22 Jan 2020 09:42 PM

மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 7 நாட்களில் தண்டனை நிறைவேற்ற வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்ற(பிளாக் வாரண்ட்) உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் மனுத் தாக்கல் செய்துள்ளது.

நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 4 பேருக்கும் 22-ம் தேதி(இன்று) தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில் கருணை மனு, மற்றும் சீராய்வு மனுத் தாக்கல் செய்ததால் தண்டனையை நிறைவேற்றுவது பிப்ரவரி 1-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

நிர்பயா கூட்டுப்பலாத்கார வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரும் மறுஆய்வுமனு, சீராய்வு மனு, கருணை மனு எனத் தாக்கல் செய்து தண்டனை தள்ளிப்போட்டு வரும் நிலையில் இந்தமனுவை மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குற்றவாளிகளின் உரிமைகளை மனதில் வைத்துக் கொள்வதைவிடப் பாதிக்கப்பட்டவர்களின் நலன்களை முன்னிறுத்தி வழிகாட்டி நெறிமுறைகளை வகுப்பதே காலத்தின் தேவை என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இன்று மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒரு குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு அவரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு 7 நாட்களில் டெத் வாரண்ட் பிறப்பிக்கவும், அதன்பின் 7 நாட்களுக்குள் மறு ஆய்வு, சீராய்வு, கருணை மனு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் குற்றவாளிக்குத் தண்டனையை நிறைவேற்ற அனைத்து நீதிமன்றங்கள், மாநில அரசுகள், சிறை அதிகாரிகள் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் தங்கள் தண்டனை குறித்து மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்ட பின், சீராய்வு மனுத் தாக்கல் செய்யக் காலக்கெடுவை விதிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

மேலும், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி கருணை மனுத் தாக்கல் செய்ய விரும்பினால், விசாரணை நீதிமன்றம் டெத் வாரண்ட் பிறப்பித்த 7 நாட்களுக்குள் அவர் கருணை மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும்.

தீவிரவாதம், பலாத்காரம், கொலை போன்ற கொடூரமான குற்றங்களை நாடு சந்தித்து வருகிறது. இந்த குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை கூட விதிக்கலாம்.

பாலியல் பலாத்கார குற்றம் கிரிமினல் குற்றம் மட்டுமின்றி, மிகவும் கொடூரமான, நாகரிகமான சமூகத்தில் மன்னிக்க முடியாத குற்றமாகும். பலாத்காரம், தனிமனிதர், சமூகத்துக்கு மட்டும் எதிரான குற்றமல்ல, மனித சமூகத்துக்கே எதிரானது.

பொதுமக்களின் நலன், பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினர் ஆகியோர் கருத்தில் கொண்டு, முன்பு பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகளை மாற்ற வேண்டும்.

கொடூரமான, காட்டுமிராண்டித்தனமான, கொடுமையான குற்றங்களைச் செய்தவர்கள் சட்டத்துடன் விளையாடுவதையும், தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைத் தள்ளிப்போடச் சட்டத்தைப் பயன்படுத்தி விளையாடுவதையும் அனுமதிக்கக் கூடாது. ஆதலால், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் சீராய்வு மனுத்தாக்கல் செய்யக் காலக்கெடு அவர்கள் விரும்பினால் வழங்க வேண்டும்.

கொடூரமான குற்றத்தில் பலகுற்றவாளிகள் ஈடுபட்டு இருந்து தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுக் காத்திருந்தால், அவர்களின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட 7 நாட்களில் விசாரணை நீதிமன்றம் தூக்குத் தண்டனை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும் தண்டனையும் அடுத்த 7 நாட்களில் நிறைவேற்றப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x