Last Updated : 22 Jan, 2020 08:43 PM

 

Published : 22 Jan 2020 08:43 PM
Last Updated : 22 Jan 2020 08:43 PM

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீது பாலியல் புகார்கூறிய பெண் ஊழியருக்கு மீண்டும் பணி

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீது பாலியல் புகார் கூறிய பெண் ஊழியருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

இதுநாள் வரை விடுமுறையிலிருந்த அந்த பெண் ஊழியர் தற்போது பணியில் சேர்ந்துள்ளார் என்றும், அந்த பெண்ணுக்குரிய அனைத்து நிலுவை ஊதிய தொகைகள், கொடைகள் வழங்கப்பட்டுவிட்டன என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் , கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்ததாகக் கூறி இரண்டு சம்பவங்களைக் குறிப்பிட்டு நீதிபதி ரஞ்சன் கோகய் மீது பாலியல் அத்துமீறல் புகார்களைத் தெரிவித்தார். இந்தப் புகார்களை உச்ச நீதிமன்றத்தில் உள்ள 22 நீதிபதிகளுக்கும், அந்தப் பெண் பிரமாணப் பத்திரமாக அனுப்பினார்.

இதைத்தொடர்ந்து அந்தப் புகாரை அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் பரிந்துரையின் அடிப்படையில் அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் மிக மூத்த நீதிபதி எஸ்.ஏ.போப்டே மூத்த நீதிபதி ஏ.எல்.ரமணா, பெண் நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய்க்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லையெனத் தீர்ப்பளித்து அவருக்கு நற்சான்று வழங்கியது.

இதற்கிடையே தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீது பாலியல் புகார் கூறிய பெண் ஊழியர் மீது டெல்லி போலீஸில் ஹரியானாவின் ஜாஜார் நகரைச் சேர்ந்த நவீன்குமார் என்பவர் மோசடிப் புகார் அளித்திருந்தார்.

டெல்லி திலக் நகர் போலீஸ் நிலையத்தில் கடந்த ஆண்டு மார்ச் 3-ம் தேதி அந்த புகார் அளிக்கப்பட்டது. இதில் உச்ச நீதிமன்றத்தில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி அந்த பெண் தன்னை ஏமாற்றி ரூ.50 ஆயிரம் மோசடி செய்துவிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த புகாரைப் பெற்றுக் கொண்ட டெல்லி திலக் நகர் போலீஸார் அந்த பெண்ணுக்கு எதிராக மோசடி, குற்றச்சதி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மார்ச் 10-ம் தேதி கைது செய்தனர். அதன்பின் மார்ச் 12-ம் தேதி அவர் ஜாமீனில் விடுதலையானார். இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த பெண்ணுக்கு எதிரான வழக்கை திரும்பப்பெறுவதாக புகார்தாரர் தெரிவித்ததையடுத்து, வழக்கை டெல்லி நீதிமன்றம் முடித்து வைத்தது.

இதையடுத்து, தற்போது அந்த பெண் ஊழியர் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் அதே பணியில் சேர்ந்துள்ளார். பணிக்கு வராத காலத்தை விடுமுறையாகக் கருதியும் அவருக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையும் வழங்கப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x