Last Updated : 22 Jan, 2020 04:38 PM

 

Published : 22 Jan 2020 04:38 PM
Last Updated : 22 Jan 2020 04:38 PM

உயர் போலீஸ் அதிகாரி மீது பாலியல் புகார்: கைதிலிருந்து விலக்களித்த மும்பை நீதிமன்றம்

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள மகாராஷ்டிரா துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் நிஷிகாந்த் மோருக்கு பம்பாய் உயர் நீதிமன்றம் புதன்கிழமை கைது செய்வதிலிருந்து இடைக்கால பாதுகாப்பு வழங்கியுள்ளது.

2019 ஜூன் 5 ஆம் தேதி ராய்காட் மாவட்டத்தின் தலோஜா நகரில் உள்ள தனது வீட்டில் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அண்டை வீட்டைச் சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரியால் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக நவி மும்பை போலீசார் தெரிவித்தனர்.

ஜூலை 12, 2019 அன்று புகார் அளித்தபோது, காவல்துறையினர் அதை எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டதாகவும், சில மாதங்களுக்குப் பிறகு டிசம்பர் 26, 2019 அன்றுதான் எஃப்.ஐ.ஆர் தாமதமாக பதிவு செய்யப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவரின் தந்தை, மும்பை காவல்துறை மீது குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மகாராஷ்டிரா துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் நிஷிகாந்த் மோர் கைது செய்யப்படும் சூழல் ஏற்பட்டது. இதனை அடுத்து பன்வெல் அமர்வு நீதிமன்றத்தில் நிஷிகாந்த் மோர் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதை நீதிமன்றம் நிராகரித்தது.

அவரை கைது செய்யும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கடந்த வாரம் குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரி மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகினார். அவரது மனுவில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைத்து குற்றச்சாட்டுகளும் "ஆதாரமற்றவை" என்று கூறினர், மேலும் இரு குடும்பங்களுக்கிடையிலான பணத் தகராறு காரணமாக அவருக்கு எதிரான புகார் அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

நிஷிகாந்தின் மனுவை விசாரித்த பி.டி.நாயக் தனது உத்தரவில் கூறியதாவது:

குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் சிறுமியின் குடும்பத்தினர் நல்லுறவைப் பேணி வந்துள்ளனர் என்பது தெரிகிறது. ஆனால் பாதிக்கப்பட்டவரின் தந்தை குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து கடன் வாங்கியதாகக் கூறப்படும் பணத்தை திருப்பித் தர மறுத்ததைத் தொடர்ந்து அவர்கள் குடும்ப உறவு கசப்பாக மாறியுள்ளது.

பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் பாதிக்கப்பட்டவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்த 2019 ஜூன் 5 ஆம் தேதி அன்று அவரது குடும்பத்தினரும் உடனிருந்தனர். வீடியோவில் பாதிக்கப்பட்டவரின் நடைஉடை பாவனைகளைப் பார்க்கும்போது பாலியல் பலாத்காரம் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு சந்தேகத்தை உருவாக்குகிறது. எனவே அவரை காவல்துறை உடனடியாக கைது செய்வதிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

எனினும், விசாரணைக்கு ஒத்துழைக்க குற்றஞ்சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரி நிஷிகாந்த் ஜனவரி 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நவி மும்பையில் உள்ள தலோஜா போலீஸ் முன் ஆஜராக வேண்டும்.

இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x