

சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தாவுக்கு எதிராக இண்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.
அகமதாபாத்த்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் கடத்தல் புகார் வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் போலீஸார் கடந்த நவம்பரில் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு ஏராளமான சிறுமிகள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நித்யானந்தா மீது கடத்தல் பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக, முன்னாள் பெண் பக்தர்கள் சிலர், அவர் மீது பாலியல் புகாரும் அளித்தனர். எனவே, பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் போலீஸார் நித்யானந்தாவை தேடி வந்தனர். இதனிடையே, தென் அமெரிக்க நாடான ஈகுவடாரில் நித்யானந்தா தலைமறைவாக உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது.
ஈகுவடாரில் ஒரு தனித் தீவினை விலைக்கு வாங்கி அதனை தனி நாடாக நித்யானந்தா அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஈகுவடாரில் நித்யானந்தா தனிநாடு உருவாக்கியுள்ளதாக வெளியான தகவலை ஈகுவடார் நாடு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
நித்யானந்தா அகதியாக தன்னை ஏற்று பாதுகாப்பு அளிக்கும்படி ஈகுவடார் நாட்டுக்கு கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால் அதனை ஏற்க ஈகுவடார் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் ஈகுவடாரில் இருந்து ஹைதி நாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நித்யானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது இருப்பிடத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
இதையடுத்து சர்வதேச போலீஸான இண்டர்போலின் உதவியுடன் நித்யானந்தாவை கைது செய்ய குஜராத் போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். அவர்களது வேண்டுகோளை ஏற்று இண்டர்போல் சார்பில் நித்யானந்தாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. ப்ளூ நோட்டீஸ் என்பது ஒருவருர் தலைமறைவாக இருக்கும்போது அவருக்கும் இடம் தெரிந்தாலோ அல்லது தங்கள் நாட்டில் அவர் பதுங்கியிருந்தாலோ இண்டர்போலுக்கு சம்பந்தபட்ட நாடு தகவல் தெரிவிக்க வேண்டும். இதற்கு வேண்டுகோள் விடுப்பதே ப்ளூ கார்னர் நோட்டீஸ் ஆகும்.