Last Updated : 22 Jan, 2020 02:04 PM

 

Published : 22 Jan 2020 02:04 PM
Last Updated : 22 Jan 2020 02:04 PM

மீண்டும் ஐஆர்சிடிசி உணவுப்பட்டியலில் கேரளாவின் புட்டு, கடலைக்கறி: எதிர்ப்புக்குப்பின் சேர்ப்பு

கேரள மக்களின் பாரம்பரிய உணவுகளான அப்பம், முட்டைக்கறி, புட்டு, கடலைக்கறி ஆகியவற்றை ஐஆர்சிடிசி திடீரென நீக்கியது, இதற்கு பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியதைத் தொடர்ந்து மீண்டும் அந்த உணவுகள் சேர்க்கப்பட்டன.

கேரள மக்களின் பாரம்பரிய உணவுகள் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக வடமாநில மக்களின் உணவுகள் கச்சோரி, சோலே பதுரே போன்றவை சேர்க்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள மக்களின் பாரம்பரிய உணவுகளான உன்னி அப்பம், முட்டைக் கறி, புட்டு, கடலைக்கறி, சுகியன் ஆகியவற்றைக் கேரளாவுக்கு உட்பட்ட ரயில்வேயின் ஐஆர்சிடிசி உணவுப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டு, சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது, ரயில்வே ட்விட்டரிலும், கடுமையான எதிர்ப்பை கேரள மக்கள் பதிவு செய்தார்கள்.

எம்.பி. ஹிபி எடனிடம் உணவுப்பட்டியலை வழங்கிய அதிகாரிகள்: படம் உதவி ட்விட்டர்


இந்நிலையில் எர்ணாகுளம் எம்.பி. ஹிபி எடன், மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு இந்த விவகாரம் தொடர்பாகக் கடிதம் எழுதினார். அதில் கேரள மக்களுக்கு வழங்கப்படும் உணவில்கூட பாகுபாடு காட்டப்படுகிறது. கேரள மக்களின் பாரம்பரிய உணவுகளான புட்டு, கடலைக்கறி, உன்னி அப்பம், சுகியான், பரோட்டா, நெய்யப்பம், கொழுக்கட்டை, பழம்பறி, போன்றவற்றை உணவுப்பட்டியலிலிருந்து ஐஆர்சிடிசி நீக்கியுள்ளது.

இந்த உணவுகள் கேரள மக்களுக்கு மிகவும் முக்கியமானது. அவற்றை மீண்டும் சேர்க்க வேண்டும். மேலும், கேரள மக்களின் உணவுகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. மதிய உணவின் விலை ரூ.35 லிருந்து ரூ.70 ஆகவும், வடை, நொறுக்குத்தீனிகள் ஆகியவற்றின் விலை 8 ரூபாயிலிருந்து ரூ.15ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அவற்றை குறைக்க வேண்டும். மலையாள மக்கள் ரயில்களிலும், ஓய்வறைகளிலும் பாகுபாட்டுடன் நடத்தப்படுகின்றனர். உணவு என்பது ஒவ்வொருவரின் உரிமை. இதில் அமைச்சர் உடனடியாக தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் " என குறிப்பிட்டு கடிதம் எழுதியிருந்தார்.

மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலின் உத்தரவின்படி இன்று காலை எம்.பி. ஹிபி எடனை ஐஆர்சிடிசி அதிகாரிகள் அவரின் இல்லத்தில் சந்தித்தனர். ஐஆர்சிடிசி உணவுப்பட்டியலில் மீண்டும் கேரள மக்களின் பாரம்பரிய உணவுகள் சேர்க்கப்பட்ட விவரத்தை தெரிவித்து, பட்டியலையும் வழங்கினர்.

மேலும், வடையின் விலையை மட்டும் குறைக்கவில்லை என்றும், மற்ற உணவுகளான பரோட்டா, இடியப்பம், அப்பம், புட்டு, கடலைக்கறி, முட்டைக் கறி ஆகியற்றின் விலை ரூ.50ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. நெய்யப்பம், சுகியன், உன்னியப்பம் ஆகிய 2 எண்ணிக்கை 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது எனும் விவரத்தையும் எம்.பி ஹிபி எடனிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x