

ஹரியாணா மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த பிரேந்திர சிங், கடந்த 2014-ம் ஆண்டில் பாஜகவில் இணைந்தார். கடந்த ஆட்சியில் பல்வேறு துறைகளின் மத்திய அமைச்சராகப் பணியாற்றினார். கடந்த 2016-ம் ஆண்டு மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவரின் பதவிக் காலம் வரும் 2022 ஆகஸ்ட் வரை உள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் பிரேந்திர சிங்கின் மகன் பிரிஜேந்திர சிங் ஹரியாணாவின் ஹிசார் தொகுதியில் வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் பிரேந்திர சிங்கின் மனைவி பிரேம் லதா போட்டியிட்டார். ஜனநாயக ஜனதா கட்சித் தலைவர் துஷ்யந்த் சவுதாலாவிடம் அவர் தோல்வி அடைந்தார். ஹரியாணாவில் தற்போது பாஜகவும் ஜனநாயக ஜனதா கட்சியும் இணைந்து ஆட்சி நடத்தி வருகின்றன. துஷ்யந்த் சவுதாலா துணை முதல்வராக பதவி வகிக்கிறார்.
மனைவியை தோற்கடித்த துஷ்யந்த் குறித்து பிரேந்திர சிங் அடிக்கடி விமர்சனம் செய்து வருகிறார். இது பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. கடந்த நவம்பரில் பிரேந்திர சிங் ராஜினாமா கடிதத்தை அளித்தார். அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், "பாஜகவில் வாரிசு அரசியல் கிடையாது. எனது மகன் எம்.பி.யாக இருப்பதால் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்" என்றார்.
பிரேந்திர சிங்கின் ராஜினாமாவை மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நேற்று முன்தினம் ஏற்றுக் கொண்டார். இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.