Published : 22 Jan 2020 08:23 AM
Last Updated : 22 Jan 2020 08:23 AM

இந்திய-நேபாள எல்லையில் 2-வது சோதனைச் சாவடி: பிரதமர் மோடி, கே.பி.சர்மா ஒலி தொடங்கி வைத்தனர்

இந்திய-நேபாள எல்லையில் 2-வது ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை பிரதமர் நரேந்திர மோடியும் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலியும் நேற்று தொடங்கி வைத்தனர்.

இந்திய-நேபாள எல்லையில், பிஹார் மாநிலம் ரக்சால் – நேபாளத்தின் பீர்கஞ்ச் இடைய கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி தொடங்கப்பட்டது. இந்நிலையில் 2-வது ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை பிரதமர் மோடியும் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலியும் காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தனர். பிஹாரின் ஜாக்பனி – நேபாளத்தின் பிராட்நகர் இடையே இந்தியாவின் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள இந்த சோதனைச் சாவடி 260 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

இங்கு தினமும் 500 லாரிகள் வந்து செல்ல முடியும். ரூ.140 கோடி செலவிலான இந்த திட்டத்தின் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக மற்றும் கலாச்சார உறவு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

பக்கத்தில் உள்ள அனைத்து நட்பு நாடுகளுடனும் வாகனப் போக்குவரத்தை எளிமையாக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது. மேலும் வர்த்தகம், கலாச்சாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இருநாட்டு எல்லையை இணைக்கும் வகையில் சாலை, ரயில் பாதை அமைப்பது போன்ற திட்டங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன.

கடந்த 2015-ல் நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பலர் உயிரிழந்ததுடன் பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். வீடுகளை இழந்தவர்களுக்கு உதவும் வகையில், இரு நாடுகளும் இணைந்து 50 ஆயிரம் வீடுகளை கட்ட முடிவு செய்யப்பட்டது. இதில் இதுவரை 45 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மீதம் உள்ள வீடுகளும் விரைவில் கட்டி முடிக்கப்பட்டு நேபாள சகோதர சகோதரிகளிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மோடிக்கு அழைப்பு

இந்நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் பேசும்போது, நேபாளத்துக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு சர்மா ஒலி அழைப்பு விடுத்தார். அப்போது, நேபாளம் செல்ல ஆவலுடன் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேலும் மோடி கூறும்போது, “புத்தாண்டில் உங்கள் ஒத்துழைப்புடன் இருதரப்பு உறவை உச்சத்துக்கு எடுத்துச் செல்வோம். அடுத்த பத்தாண்டுகள் இரு நாட்டு உறவில் புதிய அத்தியாயம் படைக்கும்” என்றார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x