6 மணிநேரம் காத்திருந்து வேட்புமனுத் தாக்கல் செய்தார் கேஜ்ரிவால்

6 மணிநேரம் காத்திருந்து வேட்புமனுத் தாக்கல் செய்தார் கேஜ்ரிவால்
Updated on
2 min read

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்தபோது கடைசி நாள் என்பதால் கடும் கூட்டம் காணப்பட்டதால் அவருக்கு 45-வது டோக்கன் வழங்கப்பட்டது. இதனால் 6 மணிநேரம் காத்திருந்து அவர் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி மாதம் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி: பிப்ரவரி 8-ம் தேதி டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11-ம் தேதி நடைபெறுகிறது. பல்வேறு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

ஆம் ஆத்மி சார்பில் முதல்வர் கேஜ்ரிவால் மீண்டும் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்வதாக அறிவித்து இருந்தார்.

அதன்படி, நேற்று அவர் தனது வீட்டில் தாய், தந்தையரிடம் ஆசி பெற்று விட்டு கட்சி நிர்வாகிகள், சக அமைச்சர்கள் புடை சூழல திறந்த வாகனத்தில் வாக்கு சேகரித்தவாறே வேட்புமனுத் தாக்கல் செய்ய புறப்பட்டார்.

செல்லும் வழியில் கட்சித் தொண்டர்கள், மக்கள் திரண்டதால் அவர்களிடம் வாக்கு சேகரித்தவாறே கேஜ்ரிவால் சென்றார். பல இடங்களில் சென்றதால் அவர் வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்தை சென்றடைய தாமதமானது.

மாலை 3 மணிவரை மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியும். ஆனால் கேஜ்ரிவால் அங்கு வந்து சேர 3 மணிக்கு மேலாகி விட்டது. இதனால் தேர்தல் அதிகாரி அங்கிருந்து சென்று விட்டார். காலதாமதமாகி விட்டதால் நாளையே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்வதாக அறிவித்தார். அதன்படி வேட்புமனுத் தாக்கலுக்கு கட்சி நிர்வாகிகளுடன், தாய், தந்தையரையும் அழைத்து வந்தார்.

வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் அலுவலகத்தில் ஏராளமான வேட்பாளர்கள் குழுமிருந்தனர். கடுமையான கூட்ட நெரிசல் காணப்பட்டது. இதையடுத்து கேஜ்வாலின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவரை முன்கூட்டியே வேடபுமனுத் தாக்கல் செய்ய போலீஸார் ஏற்பாடு செய்தனர்.

ஆனால் அதற்கு மற்ற வேட்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும், கேஜ்ரிவாலும் சாதாரண வேட்பாளர் தான் எனவும் வாதிட்டனர். இதையடுத்து வரிசைப்படியே வேட்புமனுத் தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனால் கேஜ்ரிவால் அலுவலகத்தில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. 3 மணிவரை மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் என்ற நிலையில் பலர் மனுத்தாக்கல் செய்ததால் தாமதம் ஆனது. இதையடுத்து வரிசைப்படி வேட்புமனுவை பெறுவதாகவும், நேரம் முடிந்தாலும் வேட்புமனு பெறப்படும் எனவும் அதிகாரிகள் அறிவித்தனர். அதன்படி கேஜ்ரிவாலுக்கு 45-வது டோக்கன் வழங்கப்பட்டது. வரிசைப்படி ஒவ்வொரு வரும் மனுத்தாக்கல் செய்தனர். இதனால் கேஜ்ரிவால் அங்கேயே 6 மணிநேரம் காத்திருந்து அவர் மாலை 6.30 மணிக்கு தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in