Published : 21 Jan 2020 06:16 PM
Last Updated : 21 Jan 2020 06:16 PM

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு: மேற்குவங்க சட்டப்பேரவையில் 27-ம் தேதி தீர்மானம்

கொல்கத்தா

குடியுரிமைச் சட்டத்தை கடுமையாக எதிர்த்து வரும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை வரும் 27-ம் தேதி கூட்டி தீர்மானம் நிறைவேற்றப் போவதாக அறிவித்துள்ளார்.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. எதிர்க்கட்சியான காங்கிரஸும் தீவிர போராட்டங்களை நடத்தி வருகிறது.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களும், பாஜக ஆளாத மாநில அரசுகளும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முடியாது எனத் தெரிவித்துள்ளன. இதில் கேரள அரசு குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் கடந்த மாதம் 31-ம் தேதி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது. உச்ச நீதிமன்றத்திலும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது.

கேரள மாநிலத்தைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் அமரிந்தர் சிங் தலைமையில் ஆளும் காங்கிரஸ் அரசு, குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வந்தது. கேரளா, பஞ்சாப் மாநிலங்களைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலமும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகச் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரத் தயாராகி வருகிறது.

இந்தநிலையில் குடியுரிமைச் சட்டத்தை கடுமையாக எதிர்த்து வரும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை வரும் 27-ம் தேதி கூட்டி தீர்மானம் நிறைவேற்றப் போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் கூறியதாவது:
‘‘ஜனவரி 27-ம் தேதி காலை 11 மணியளவில் மேற்குவங்க மாநில சட்டப்பேரவையில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும். இடதுசாரி எம்எல்ஏக்களும் இந்த தீர்மானத்துக்கு ஆதரவளிக்க வேண்டும். இதுதொடர்பாக அவர்கள் கட்சித் தலைவர்களிடம் பேசியுள்ளேன்.’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x