

காஷ்மீரின் தெற்குப் பகுதியில் உள்ள டிரால் பகுதியில் இன்று பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படை தரப்பில் இருவர் உயிரிழந்தனர்.
ஷோபியான் மாவட்டத்தில் உள்ள வாச்சி பகுதியில் நேற்று தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த சூழலில் இன்று மேலும் இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
தெற்கு காஷ்மீரில் உள்ள ட்ரால் பகுதியில் உள்ள ஜாந்த் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று பாதுகாப்புப் படையினர் அதிகாலை முதல் ஜாந்த் கிராமத்தில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒரு வீட்டில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளைப் பாதுகாப்புப் படையினர் அடையாளம் கண்டு அவர்களைச் சரணடையக் கோரினர். ஆனால், தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் இருதரப்புக்கும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இதில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் தீவிரவாதிகள் இருவரும் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினர் தரப்பிலும் இருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே ஷோபியான் மாவட்டத்தில் நேற்று பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி நடவடிக்கையில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் வாசிம், அதில் பஷிர், ஜகாங்கிர் ஆகியோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.