

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி வரும் மார்ச் 25-ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது. இதற்கான அறக்கட்டளை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வரும் பிப்ரவரி 9-ம் தேதிக்குள் நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாபர் மசூதி, ராமஜென்ம பூமி நில வழக்கில், கடந்த நவம்பர் 9-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்றும் இதற்காக 3 மாதத்துக்குள் அறக்கட்டளையை நிறுவ வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதுபோல, மசூதி கட்டுவதற்காக சன்னி வக்பு வாரியத்துக்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, அயோத்தி தீர்ப்பின் அம்சங்களை நடைமுறைப்படுத்துவதற்காக மத்திய உள் துறை அமைச்சகம், அதிகாரிகள் குழுவை அமைத்தது. அக்குழு அறக்கட்டளையை நிறுவுவதற்கான பணிகளை செய்து வருகிறது. இதில், மத்திய உள் துறை அமைச்சகம் மற்றும் உத்தரபிரதேச அரசின் உயர் அதிகாரிகள், விஸ்வ இந்து பரிஷத் துணைத் தலைவர் சம்பத் ராய் உட்பட 11 உறுப்பினர்கள் இருப்பார்கள் எனத் தெரிகிறது. அறக்கட்டளை நிறுவுவதற்கான பணிகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பு முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, உச்ச நீதிமன்றத்தின் 3 மாத கெடு வரும் பிப்ரவரி 9-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அதற்குள் ராமர் கோயில் அறக்கட்டளை நிறுவப்படும் எனத் தெரிகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நாளில் மசூதி கட்டுவதற்கான நில ஒதுக்கீடு குறித்த உத்தரவும் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. உத்தரபிரதேச அரசு மசூதி கட்டுவதற்காக 4 இடங்களை தேர்வு செய்து மத்திய அரசுக்கு ஏற்கெனவே அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.
ராமர் கோயில் அறக்கட்டளை நிறுவப்பட்டதும், ராம நவமியை ஒட்டி மார்ச் 25 முதல் ஏப்ரல் 2-ம் தேதிக்குள் கோயில் கட்டுமானப் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக, கோயிலின் வடிவமைப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் வழங்குவார்.
ராமர் கோயில் அறக்கட்டளை, கோயில் கட்டுமானத்துக்காக நாடு முழுவதிலுமிருந்து நன்கொடை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஒரு குடும்பத்திடமிருந்து குறைந்தபட்சம் ரூ.11 நன்கொடையாக கோருவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
ஜார்க்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உத்தரபிரதேச முதல் வர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயில் கட்ட ஒவ்வொரு குடும்பத்தினரும் ரூ.11 நன்கொடை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.