Last Updated : 21 Jan, 2020 08:47 AM

 

Published : 21 Jan 2020 08:47 AM
Last Updated : 21 Jan 2020 08:47 AM

இந்து மதக் கோயில்களின் பழங்கால பூஜை வழிபாடுகள் பற்றிய பாட திட்டங்களை தயார் செய்கிறது மத்திய அரசு

இந்து மதக் கோயில்களின் பழங்கால பூஜை வழிபாடுகள் பற்றிய பாடத் திட்டங்களை மத்திய அரசு தயாரித்து வருகிறது.

கடந்த 2014-ல் பிரதமராகப் பதவி ஏற்ற நரேந்திர மோடி விரும்பி அறிமுகப்படுத்தியது தேசிய திறனாய்வு மற்றும் சுயதொழில் வளர்ச்சி திட்டம். இதற்காக, திறன்மேம்பாடு மற்றும் சுயவேலைவாய்ப்புத்துறை எனும் பெயரில் ஒரு மத்திய அமைச்சகமும் 2015-ல் புதிதாக உருவாக்கப்பட்டது. இந்த அமைச்சகம், 10 மற்றும் பிளஸ்-2 வரை மட்டும் என குறைந்த கல்வித்தகுதி கொண்ட இளைஞர்களுக்கு பல்வேறு வகை திறனாய்வுப் பயிற்சியையும், சுயவேலைவாய்ப்பு திட்டங்களையும் அறிமுகம் செய்தது.

இந்தவகையில், அத்துறையின் சார்பில் புதிதாக இந்து மதக்கோயில்களில் பணியாற்றும் பண்டிதர்களுக்காகவும் குறுகியகாலப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக, இந்து மதக்கோயில்களின் பழங்கால பூஜை வழிபாடு கள் பற்றிய பாடத் திட்டங்களை மத்திய அரசு தயாரித்து வருகிறது. இதன்மூலம், முறையானப் பயிற்சி பெற்ற பண்டிதர்களுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என அரசு எதிர்பார்க்கிறது.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் மத்திய திறன்மேம்பாடு மற்றும் சுயவேலைவாய்ப்பு அமைச்சக அதிகாரிகள் வட்டாரங்கள் கூறும்போது, ‘‘தற்போது பல பண்டிதர்கள் முறையானப் பயிற்சி இன்றி, தம் குடும்ப வழிகாட்டுதல்களின்படி கற்றதை கோயில்களின் பூஜை வழிபாடுகளில் பயன்படுத்தி வருகிறார்கள்.

இதை முறைப்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு அரசு அங்கீகாரம் கிடைக்கும் வகையிலும் இந்தப் புதிய பயிற்சி அமையும். இதில், முக்கியமாக பழங்கால பூஜை வழிபாடுகள் குறுகியக் காலப் பயிற்சியாகக் கற்றுத்தரப்பட உள்ளது’’ எனத் தெரிவித்தன.

இந்தப் பயிற்சிகளை மத்திய அரசு ஆங்காங்கே உள்ள சமஸ்கிருதக் கல்வி நிலையங்கள் மூலமாக கற்றுத்தர உள்ளது. பழங்கால பூஜை வழிபாடுகள் பற்றிய பாடங்களுடன் ஏற்கெனவே உள்ள வேத பாடங்களும் இங்கு கற்றுத் தரப்பட உள்ளன. மத்திய அரசின் இந்த பயிற்சி பெற்றவர்களால் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்துக்கள் இடையே பழங்கால பூஜை வழிபாடுகள் பற்றிய விழிப்புணர்வும் ஏற்படும் என அரசு நம்புகிறது.

இதன்மூலம், இந்திய இளம் சமுதாயத்தினரை இந்திய நாட்டின் கலாச்சாரத்துடனும் இணைப்பது எனவும், அவர்களுக்கு அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் மத்திய அரசு நம்புகிறது.

இக்குறுகியக் காலப்பயிற்சி பெற்றவர்கள் வெளிநாடுகளிலும் பணியாற்றும் வகையில் அவர்களுக்கு ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற வெளிநாட்டு மொழிகளையும் மத்திய அரசு கற்றுத்தர உள்ளது. இதற்காக மத்திய திறன்மேம்பாடு மற்றும் சுயவேலைவாய்ப்பு அமைச்சகம் சார்பில் தனியாக ஒரு திறன்மேம்பாட்டு கவுன்சிலும் அமைக்கப்பட உள்ளது.

இந்து மத நம்பிக்கை மீது உலகம் முழுவதிலும் வாழும் இந்துக்கள் தம் மதவழிபாடுகள் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். எனினும், அதன் உண்மையான பூஜை மற்றும் சடங்குகள் பற்றிய விழிப்புணர்வு குறைவாக உள்ளதாகக் கருதப்படுகிறது. இவர்களில், பலரும் பணி, கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளிலும் வாழ்கின்றனர்.

இவர்கள் இடையே இந்துமத நம்பிக்கையை வளர்த்து விழிப்புணர்வை உருவாக்குவது அவசியம் என்பது மத்திய அரசின் கருத்தாகும். இதன் அடிப்படையில் தற்போது பழங்கால பூஜை வழிபாடுகள் பற்றிய பாடத் திட்டங்களை அரசு உருவாக்கி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x