

காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் மசூதி அருகே கையெறி குண்டு வெடித்துச் சிதறியதில் 11 பேர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "சோபியான் மாவட்டத்தில் உள்ளது ஜாமியா டிரென்ஸ் மசூதி. இங்கு இன்று காலை தொழுகைக்காக பலர் குவிந்திருந்தனர். வழக்கமான தொழுகைக்குப் பின்னர் மசூதியில் இருந்து வெளியே வந்த நிசாமி (தொழுகையை ஏற்று நடத்துபவர்) மசூதி வளாகத்தில் ஒரு தகர டம்பளர் கவிழ்ந்து கிடந்ததை பார்த்திருக்கிறார். அவர் அதை நேரே நிமிர்த்த முயற்சித்த போது அது வெடித்துச் சிதறியது. இதில் 11 பேர் காயமடைந்தனர். விசாரணையில் அது கையெறி குண்டு எனத் தெரியவந்துள்ளது" என்றார்.
முன்னதாக நேற்று (புதன்கிழமை) கான்யார் எனும் பகுதியில் பாதுகாப்புப் படையினர் ரோந்து மேற்கொண்டிருந்த போது தீவிரவாதிகள் கையெறி குண்டை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், ஒரு போலீஸ்காரர், சி.ஆர்.பி.எப். வீரர்கள் இருவர், பொதுமக்களில் ஒருவர் என 4 பேர் காயமடைந்தனர்.