

தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு (என்பிஆர்) எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில, மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த 2015-ம் ஆண்டே ரிசர்வ் வங்கி மூலம் என்பிஆரைக் கொண்டுவர முடிவு செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது பண மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டுவருவதற்கு முன்பாகவே இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய வருவாய்த்துறை, நிதியமைச்சகம் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி சட்டவிரோதப் பணப் பரிமாற்ற திருத்த விதிகளில் திருத்தம் கொண்டுவரும்போது ஒரு அறிவிக்கையை வெளியிட்டது. இதன்படி மத்திய நிதியமைச்சகம் ரிசர்வ் வங்கிக்குப் பிறப்பித்த வழிகாட்டுதலின்படி, என்பிஆரையும், வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள் (கேஒய்சி படிவம்) படிவத்தில் அதிகாரபூர்வ ஆவணங்களாகச் சேர்க்கக் கோரியது.
வங்கிக் கணக்கு தொடங்குவதற்குத் தேவைப்படும் அதிகாரபூர்வ ஆவணங்களில், "பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஆதார் அடையாள எண், தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்காளர் அடையாள அட்டை, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கான அடையாள அட்டை, பெயர், முகவரி உள்ளிட்டவை கொண்ட தேசிய மக்கள்தொகை பதிவாளர் அளித்த கடிதம் ஆகியவையும் ஆவணங்களாக எடுக்கலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நேரத்தில் நிதியமைச்சராக அருண் ஜேட்லியும், இணையமைச்சர்களாக நிர்மலா சீதாராமனும், ஜெயந்த் சின்ஹாவும் இருந்தனர். ஆனால், என்பிஆர் குறித்து அப்போது பெரிய அளவுக்கு வெளியே தெரியாத நிலையில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக அரசு 2-வது முறையாகப் பதவி ஏற்ற பின்தான் பெரிதாக வெளியாகியுள்ளது.
ஆனால், நிதியமைச்சகம் இந்த அறிவிக்கை விடுத்து 3 ஆண்டுகள் கழித்து, கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்துதான் ரிசர்வ் வங்கி தனது கேஒய்சி வழிகாட்டுதலில்(எம்டி) என்பிஆரைச் சேர்த்தது. மூன்று ஆண்டுகள் தாமதமாகக் காரணம் என்ன என்பதும் தெரியவில்லை
இதற்கிடையே சமீபத்தில் ஹைதராபாத்தில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி, நாளேட்டில் வெளியிட்ட விளம்பரம் ஒன்றில் புதிய வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும், கிரெடிட் கார்டு உள்ளிட்ட பல்வேறு வசதிகளைப் பெற என்பிஆர் ஆவணத்தைப் பயன்படுத்தலாம் எனத் தெரிவித்திருந்தது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் மேலாளர் இயக்குநர் பல்லவ் மொகாபத்ராவிடம் நிருபர் கேட்டபோது அவர் கூறுகையில், " ரிசர்வ் வங்கி கேஒய்சி வழிகாட்டு நெறிமுறையில் என்ன குறிப்பிட்டுள்ளதோ, அதன்படிதான் விளம்பரம் செய்தோம். என்பிஆர் ஆவணமும் அதிகாரபூர்வ ஆவணம்தான். ஆனால், அந்த ஆவணம் கட்டாயமில்லை. இருந்தால் வழங்கலாம்" எனத் தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "கேஒய்சி விதிப்படி வங்கிக் கணக்கு புதிதாகத் தொடங்க அதிகாரபூர்வ ஆவணங்களில் என்பிஆர் ஆவணமும் ஒன்றுதான். ஆனால், என்பிஆர் வழங்குவது கட்டாயமில்லை. மற்ற ஆவணங்கள் இருந்தால் வழங்கலாம்" எனத் தெரிவிக்கப்பட்டது.