Last Updated : 20 Jan, 2020 02:58 PM

 

Published : 20 Jan 2020 02:58 PM
Last Updated : 20 Jan 2020 02:58 PM

கேரளா, பஞ்சாப்பைத் தொடர்ந்து ராஜஸ்தான்: குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவர முடிவு

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசும் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்ற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் வெள்ளிக்கிழமை தொடங்கும் ராஜஸ்தான் மாநில பட்ஜெட் கூட்டத்தில் சிஏஏ சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவர ஆளும் காங்கிரஸ் கட்சி பரபரப்பாக இயங்கி வரும் நிலையில், அதை முறியடிக்க எதிர்க்கட்சியான பாஜகவும் ஆயத்தமாகி வருகிறது.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. போராட்டங்கள் நடந்தன, அதில் வன்முறைச் சம்பவங்களும் ஏற்பட்டு 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களும், பாஜக ஆளாத மாநில அரசுகளும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முடியாது எனத் தெரிவித்துள்ளன. இதில் கேரள அரசு குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் கடந்த மாதம் 31-ம் தேதி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது. உச்ச நீதிமன்றத்திலும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது.

கேரள மாநிலத்தைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் அமரிந்தர் சிங் தலைமையில் ஆளும் காங்கிரஸ் அரசு, குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவந்தது. இந்த சூழலில் கேரளா, பஞ்சாப் மாநிலங்களைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலமும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகச் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரத் தயாராகி வருகிறது.

வரும் வெள்ளிக்கிழமை ராஜஸ்தான் மாநில அரசின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது. அந்தக் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் சாந்தி தாரிவால் நிருபர்களிடம் இன்று கூறுகையில், " வெள்ளிக்கிழமை தொடங்கும் கூட்டத்தொடரில் முதல் கட்டமாக எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்படும். அதன்பின், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவரப்படும்" எனத் தெரிவித்தார்.

பாஜக மாநிலத் தலைவர் சதீஸ் பூணியா நிருபர்களிடம் கூறுகையில், "குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகச் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்தால் அதைக் கடுமையாக எதிர்க்க பாஜக திட்டமிட்டுள்ளது. அது தொடர்பாக வரும் 23-ம் தேதி அனைத்து எம்எல்ஏக்கள் கூட்டத்தையும் கூட்டி விவாதிக்க இருக்கிறோம்.

முதல்வர் அசோக் கெலாட் இரு மாறுபட்ட நிலைப்பாடு எடுத்து மக்களைத் தவறாக வழிநடத்துகிறார். பாகிஸ்தானில் இருந்து வந்துள்ள 100 அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கப்படும் என்றும், நிலமும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு புறம் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக அமைதிப் பேரணி நடத்தி, மாநிலத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என வாக்குறுதியளித்துள்ளார். இந்த இரட்டை நிலைப்பாடு ஏன் என்று முதல்வர் பதில் அளிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x