

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஷோபியான் மாவட்டத்தில் இன்று நடந்த என்கவுன்ட்டரில் ஹிஸ்முல் முஜாகிதீன் தீவிரவாதிகள் 3 பேரைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷோபியான் மாவட்டத்தில் உள்ள வாச்சி பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதலில் தீவிரவாதிகள் இருப்பது உறுதியானது.
இதையடுத்து, தீவிரவாதிகளைச் சரண் அடையக் கோரி பாதுகாப்புப் படையினர் கேட்டுக்கொண்டனர். ஆனால், தீவிரவாதிகள் சரண் அடைய மறுத்து பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
பாதுகாப்புப் படையினரும் தற்காப்பு முயற்சிக்காக, பதிலடி கொடுத்துத் திருப்பிச் சுட்டனர். நீண்டநேரம் நடந்த சண்டையின் இறுதியில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அவர்கள் 3 பேரும், ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது. அந்த தீவிரவாதிகளில் ஒருவர் பெயர் அதில் ஷேக் என்பதும் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம்தேதி ஸ்ரீநகரில் பிடிபி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ அஜாஜ் மிர் இல்லத்துக்குள் புகுந்து ஆயுதங்களைக் கொள்ளையடித்துச் சென்றவர் என்பதும் தெரியவந்தது.
மற்றொரு தீவிரவாதியின் பெயர் வாசீம் வானி என்பதும் ஷோபியான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. மூன்றாவது தீவிரவாதி பெயர் தெரியவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.