

தேசிய குடிமக்கள் பதிவேடு (என்பிஆர்), என்ஆர்சி ஆகியவற்றை மாநிலத்தில் அமல்படுத்தமாட்டோம். மக்கள்தொகை கணக்கெடுப்புக்கும் தேவையான ஒத்துழைப்பை வழங்குவோம் என்று கேரள அரசு முடிவு செய்து மத்திய அரசுக்குத் தகவல் தெரிவிக்க உள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களும், பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தையும், என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றையும் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
குறிப்பாக கேரளா, பஞ்சாப் மாநில அரசுகள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கூறி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது. இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் இன்று திருவனந்தபுரத்தில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் என்ஆர்சி, என்பிஆர் குறித்தும், மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பில் இருந்து பெற்றோரின் பிறந்த தேதி விவரங்கள், பதில் அளிப்போரின் பிறந்த தேதி ஆகியவற்றை நீக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், கேரள மாநிலத்தில் என்பிஆர், என்ஆர்சியை எந்தக் காரணத்தைக் கொண்டும் அமல்படுத்தமாட்டோம், அதேசமயம் மக்கள்தொகை கணக்கெடுப்புக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குவோம் என்று முடிவு செய்யப்பட்டது.
மத்திய பதிவாளர் துறைத் தலைவர் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர், மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்குக் கடிதம் மூலம் என்பிஆர், என்சிஆர் பணிகளுக்கு ஒத்துழைக்க முடியாது என்று தெரிவிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது
என்ஆர்சியும், என்பிஆரும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு உதவும் என்பதால் அதை நடைமுறைப்படுத்த அனுமதிக்க மறுத்துவிட்டது.
மேலும், கடந்த வாரம் கேரள அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பிறப்பித்த உத்தரவில், மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது, என்பிஆர் குறித்த எந்தத் தகவலும் இடம் பெறக்கூடாது. இதுதொடர்பாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பதிவாளருக்கு அனுப்பும் தகவலிலும் என்பிஆர் குறித்த தகவல் ஏதும் இடம் பெறக்கூடாது என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.