Published : 20 Jan 2020 12:32 PM
Last Updated : 20 Jan 2020 12:32 PM

குடியுரிமைச் சட்டம்; உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர எனது ஒப்புதல் அவசியம்: கேரள ஆளுநர் திட்டவட்டம்

திருவனந்தபுரம்

எனது ஒப்புதல் பெறாமல் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக கேரள மாநில அரசு உச்ச நிதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது சட்டவிரோதம் என அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார்.

குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதை தவிர கேரளாவுக்கு வேறு வழியில்லை என அம்மாநில முதல்வர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் சில மாநில அரசுகள் அறிவித்துள்ளன. அதுபோலவே குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் கடந்த டிசம்பர் 31-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் கேரள அரசின் தீர்மானம் அரசியல் சாசனப்படியோ அல்லது சட்டப்படியோ செல்லாது என கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்து இருந்தார்.

எனினும் கேரள அரசு குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது. இதுகுறித்து மாநில அரசிடம் விளக்கம் கேட்கப்படும் என ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறியிருந்தார்.

இந்த நிலையில் அவர் கேரள மாநில அரசிடம் விளக்கம் கோரினார். ஆளுநர் அலுவலகத்தில் இருந்து கேரள அரசின் தலைமைச் செயலாளரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. அதில், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக உச்ச நிதிமன்றத்தை அணுகியபோது தகவல் தெரிவிக்காதது ஏன் என விளக்கம் கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் இன்று அவர் இந்த விவகாரம் குறித்த பேசினார். அவர் கூறியதாவது:

‘‘மாநிலம் மற்றும் மத்திய அரசு அல்லது பிற மாநிலங்கள் தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும்போதோ அல்லது உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தை அணுகும்போதோ மாநில முதல்வர் ஆளுநரிடம் அதனை அனுப்பி தெரிவித்து ஒப்புதல் பெற வேண்டும். இதனை அரசியல் சட்டம் தெளிவாக கூறியுள்ளது. ஆனால் குடியுரிமைச் சட்ட விவகாரத்தில் கேரள அரசு சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டுள்ளது.

அனைவரும் சட்டப்படி செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். அதற்காகவே இதனை வலியுறுத்துகிறேன். மாநில அரசுகளுக்கு அரசியல் சட்டம் வரையறுத்துள்ள விதிமுறைகள்படி மட்டுமே கேரள அரசு நடக்க வேண்டும். சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடக்கூடாது.’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x