தேர்தல் நிதிப் பத்திரங்களுக்கு தடை விதிக்க மறுப்பு; மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

உச்ச நீதிமன்றம் : கோப்புப்படம்
உச்ச நீதிமன்றம் : கோப்புப்படம்
Updated on
1 min read

தேர்தல் நிதிப்பத்திரங்களுக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் அடுத்த 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

அதேசமயம், தேர்தல் நிதிப்பத்திரங்களுக்கு இடைக் கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது

ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு(ஏடிஆர்) உச்ச நீதிமன்றத்தில் இந்த பொதுநலன் மனுவைத் தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில், " தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் கணக்கில் வராத கறுப்புப் பணம் முறையற்ற வகையில் ஆளும் கட்சிகளுக்குப் போய் சேர்கின்றது. இந்த தேர்தல் நிதிப்பத்திரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூட அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆதலால், இந்த தேர்தல் நிதிப்பத்திரங்களுக்கு தடை விதிக்க வேண்டும்" எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆர். காவே, சூர்யகாந்த் ஆகியோர் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகினார், தேர்தல் ஆணையத்தின் சார்பில் வழக்கறிஞர் ராகேஷ் துவிவேதி ஆஜராகினார்.

பிரசாந்த் பூஷன் வாதிடுகையில், " தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் கறுப்புப்பணம் ஆளும் அரசுகளுக்குப் போய் சேர்கிறது. இது ஊழலை ஊக்குவிக்கும். ஆதலால் தடைவிதிக்க வேண்டும். இந்த திட்டத்தைத் தடை செய்யக் கோரி ஏற்கனவே ஒருமுறை ரிசர்வ் வங்கிகூட தெரிவித்துள்ளது" எனத் தெரிவித்தார்

தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் ராகேஷ் துவிவேதி வாதிடுகையில், " ஏற்கனவே இதுபோன்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த மனு மீது பதில் அளிக்கத் தேர்தல் ஆணையத்துக்கு 4 வாரங்கள் அவகாசம் தேவை" எனக் கோரினார்

இந்த வாதங்களைக் கேட்ட தலைமை நீதிபதி போப்டே, " தேர்தல் நிதிப்பத்திரங்களுக்கு இடைக்காலத் தடை ஏதும் விதிக்க முடியாது. மனுதாரர் மனுவை ஏற்றுத் தேர்தல் ஆணையத்துக்கும், மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறேன். 2 வாரங்களுக்குள் பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். 2 வாரங்களுக்குப்பின் மீண்டும் இந்த வழக்கு பட்டியலிடப்படும்" என உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in