

‘குடியுரிமைச் சட்டம் உட்பட ஒரு சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றி விட்டால் அதனை செயல்படுத்த மாட்டோம் என எந்த ஒரு மாநில அரசும் சொல்ல முடியாது என ஹரியாணா மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேந்தர் சிங் ஹூடா கூறியுள்ளார்.
மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. எதிர்க்கட்சியான காங்கிரஸும் தீவிர போராட்டங்களை நடத்தி வருகிறது.
மேற்குவங்கம், கேரளாவை தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலமும் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட காங்கிரஸ் ஆளும் பிற மாநிலங்களும் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் என தகவல் வெளியானது. ஆனால் இந்த முடிவுக்கு எதிராக ஹரியாணா மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேந்தர் சிங் ஹூடா கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
‘‘குடியுரிமைச் சட்டம் உட்பட ஒரு சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றி விட்டால் அதனை செயல்படுத்த மாட்டோம் என எந்த ஒரு மாநில அரசும் சொல்ல முடியாது. இந்த அரசியல் சட்டத்தின்படி அதுவே நடைமுறை. எனினும் நீதிமன்றம் சென்று சட்ட விதிமுறைக்கு உட்படுத்தலாம். அதற்கு மட்டுமே வாய்ப்புள்ளது’’ எனக் கூறினார்.