

பாஜகவின் புதிய தலைவராக ஜே.பி.நட்டா இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகவின் தேசிய தலைவராக அமித் ஷா பதவி வகித்து வருகிறார். கடந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற அமித் ஷா, மத்திய உள் துறை அமைச்சரானார். பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி என்பது வழக்கமாக உள்ளது.
இதையடுத்து, புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை பாஜக தொடங்கியது. இதனிடையே, கடந்த ஜூலை மாதம் கட்சியின் செயல் தலைவராக ஜே.பி.நட்டா நியமிக்கப்பட்டார். இந்நிலையில், கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு இன்று பெறப்படுகிறது. இதில் போட்டியிருந்தால் நாளை தேர்தல் நடைபெறும்.
எனினும், பாஜகவைப் பொறுத்தவரை போட்டியின்றி ஒருமனதாக தலைவரை தேர்ந்தெடுப்பது வழக்கமாக உள்ளது. இதன்படி, இப்போது செயல் தலைவராக உள்ள ஜே.பி.நட்டா இன்று மனு தாக்கல் செய்ய உள்ளார். இவரை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்ய மாட்டார்கள் எனத் தெரிகிறது. இதனால், அவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இமாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நட்டா, மாணவ பருவத்திலேயே ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்து பணியாற்றினார். பின்னர் பாஜக கட்சிப் பணிக்கு மாறினார். - பிடிஐ