

எண்ணெய், எரிவாயு சோதனைகள் நடத்துவதற்கு சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் முன் அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறையை மத்திய அரசு தளர்த்தி உள்ளது.
மக்கள் தொகை பெருக்கம் மற்றும் மாறிவரும் வாழ்க்கைச் சூழலில் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. எரிசக்தி பயன்பாட்டில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்து 3-வது பெரிய நாடாக இந்தியா உள்ளது. எனினும், அதற்கு ஏற்றபடி எரிசக்தி ஆதாரங்கள் இந்தியாவில் இல்லை. இந்நிலையில், இறக்குமதியை பெருமளவில் நம்பி இருக்காமல் உள்நாட்டில் எரிசக்தி ஆதாரங்களை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எண்ணெய், எரிவாயு சோதனைகளை அதிக அளவில் நடத்தி எண்ணெய் வளங்களை கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தி உள்ளது.
எண்ணெய், எரிவாயு சோதனை நடத்துவதற்கு சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் முன் அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. இதனால், நடைமுறை தாமதங்கள் ஏற்படும் என்பதால் சோதனைகள் விரைவாகவும் அதிக அளவிலும் நடப்பதற்கு வசதியாக சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் முன் அனுமதியை எண்ணெய், எரிவாயு நிறுவனங்கள் பெறத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடல், கரைப்பகுதி ஆகிய 2 இடங்களிலும் நடத்தப்படும் சோதனைகளுக்குமே முன் அனுமதி தேவையில்லை என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், முன் அனுமதி பெறாமல் சோதனை நடத்தலாம் என்ற அறிவிப்புக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வரைமுறையின்றி சோதனைகள் அதிக அளவில் நடந்தால் அது விவசாயத்தையும் கடல் வளத்தையும் பாதிக்கும் என்றும் இதனால். விவசாயிகளும் மீனவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.