

குடியுரிமை திருத்த சட்டம் இந்திய முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்கும் என்பதை நிரூபிக்கத் தயாரா? என்று ராகுல் காந்திக்கு அமித் ஷா சவால் விடுத்துள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் நடந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசியதாவது:
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து காங்கிரஸ் தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. குடியுரிமை திருத்த சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது. அகதிகளாக வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்குதான் அந்த சட்டம். இந்திய முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. உங்கள் குடியுரிமையை யாரும் பறிக்க முடியாது என்று நமது நாட்டின் முஸ்லிம் சகோதரர்களுக்கு உறுதியளிக்கிறேன். எங்களுக்கு இருக்கும் அதே உரிமைகள் உங்களுக்கும் உள்ளது.
காங்கிரஸும் அதன் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் மக்களிடம் குழப்பம் ஏற்படுத்த முயற்சித்து தொடர்ந்து பொய்களை பரப்பி வருகின்றனர். குடியுரிமை சட்டம் இந்திய முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்கும் என்பதை நிரூபிக்கத் தயாரா என்று ராகுல் காந்திக்கு சவால் விடுகிறேன். இது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி உங்களுடன் விவாதிக்கத் தயாராக உள்ளார். ஓட்டு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் கட்சி மத அடிப்படையில் நாட்டை பிரிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.