

இந்த தேசம் இந்துக்களுக்குச் சொந்தமானது என்று ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் சொல்லும் போது, நாட்டில் உள்ள 130 கோடி மக்களும் இந்துக்கள்தான் என்பதையே குறிக்கும் என ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்
உத்தரப்பிரதேச மாநிலம், பரெய்லி நகரில் நடந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
இந்த தேசம் இந்துக்களுக்குச் சொந்தமானது என்று ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் சொல்லும் போது, நாட்டில் உள்ள 130 கோடி மக்களும் இந்துக்கள்தான் என்பதையே குறிக்கும். அனைத்து மக்களும் இந்துக்கள் என்பதால், யாருடைய மதத்தையும், மொழியையும், ஜாதியையும் மாற்ற விரும்புகிறோம் என்று அர்த்தமில்லை. அரசியலமைப்புச் சட்டத்தைத் தவிர மிகப்பெரிய அதிகார மையம் இருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை. நாங்கள் அரசியலமைப்புச் சட்டத்தை நம்புகிறோம்
இந்துத்துவா என்பது முழுமையான அணுகுமுறை. நம்முடைய முன்னோர்கள் அனைவரும் இந்துக்களாக இருந்திருந்தார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இதுதான் வேற்றுமையில் ஒற்றுமை, உணர்வுரீதியான ஒற்றுமை.
இந்த தேசம் அரசியலமைப்புச் சட்டத்தால் இயங்குவதால், சிறப்பான எதிர்காலம் நாட்டுக்கு இருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் நீங்கள் படித்துப் பார்த்தால், தேசத்தின் உணர்வு குறித்து உங்களால் உணர முடியும். நம்முடைய தொடக்கத்தையும், இலக்குகளையும் அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது.
இஸ்ரேல் நாட்டில் இருந்து அதிகமாக கற்கவேண்டும். சுதந்திரத்துக்காகப் போராடி, இப்போது உலகில் முன்னணி நாடுகளில் ஒன்றாக இஸ்ரேல் விளங்குகிறது.
மக்கள் தொகைக் கட்டுப்பாடு குறித்து குழப்பமான கருத்து நிலவுகிறது. நான் சொல்வதெல்லாம் மக்கள் தொகை ஒரு பிரச்சினை அதேசமயம், அது ஒரு வளம். ஆதலால் இந்த அடிப்படையில் கொள்கை வகுக்கப்பட வேண்டும். ஒருவருக்கு எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என கொள்கை வகுக்கப்படும்போது முடிவு செய்ய வேண்டும். எந்த விதியையும் நான் சொல்லவில்லை, அது என்னுடைய வேலையும் இல்லை.
இவ்வாறு மோகன் பாகவத் தெரிவித்தார்