Last Updated : 19 Jan, 2020 03:23 PM

 

Published : 19 Jan 2020 03:23 PM
Last Updated : 19 Jan 2020 03:23 PM

சிஏஏ: மாநிலங்கள் அமல்படுத்த மறுப்பது அரசியலமைப்புக்கு விரோதம்; அதான் சாமி, தஸ்லிமா உதாரணம்: நிர்மலா சீதாராமன் பேச்சு

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த சில மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன, இந்த செயல் அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களும், பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தையும், என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

குறிப்பாகக் கேரளா, பஞ்சாப் மாநில அரசுகள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கூறி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது. இந்த சூழலில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு உண்டாக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் பல்வேறு விளக்க கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

சென்னை சிட்டின்ஸ் ஃபாரம் சார்பில் சென்னை தி நகரில் உள்ள ஒரு அரங்கில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக விளக்கக் கூட்டம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த சில மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. அவ்வாறு எதிர்ப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமான செயல். நாடாளுமன்றத்தில் குடியுரிமைத் திருத்தச்சட்டம் நிறைவேறி இருப்பதால், அனைத்து மாநிலங்களும் இதை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு இருக்கிறது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மாநில அரசுகள் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. இது அரசியல் கட்சிகள் அறிக்கை விடுவதுபோன்று தான். இதை நாங்கள் புரிந்து கொண்டோம்.

ஆனால் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மாநிலத்தில் நடைமுறைப்படுத்தமாட்டோம் என்று கூறுவது சட்டத்துக்கு எதிரானது. நாட்டில் உள்ள ஒவ்வொருக்கும், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய சட்டத்தை மதித்து அமல்படுத்த வேண்டிய பொறுப்பு இருக்கிறது.

கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டுவரை 391 ஆப்கானிஸ்தான் முஸ்லிம்களுக்கும், பாகிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்து வந்த 1595 பேருக்கும் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்த 2016-ம் ஆண்டில் பாடகர் அதான் சாமி, எழுத்தாளர் தஸ்லிம் நஸ்ரின் ஆகியோருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆதலால் எதிர்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து குற்றச்சாட்டுகளும் தவறானவை.

கடந்த 6 ஆண்டுகளில் 2,838 பாகிஸ்தானிய அகதிகளுக்கும், 914 ஆப்கானிஸ்தானிய அகதிகளுக்கும், 172 வங்கதேசத்தினருக்கும் இந்தியா குடியுரிமை வழங்கியுள்ளது. இதில் முஸ்லிம்களும் இருக்கிறார்கள். கடந்த 1964 முதல் 2008ம் ஆண்டுவரை 4 லட்சம் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டுவரை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மற்றும் வங்கதேசத்தில் இருந்து வந்த 566 முஸ்லிம்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் நேற்று கேரள இலக்கிய விழாவில் பேசுகையில்கூட " நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை எந்த மாநில அரசும் நடைமுறைப்படுத்த முடியாது என்று கூற முடியாது. அது அரசியலமைப்புச் சட்டத்துக்கே விரோதமானது" எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x