

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக உச்ச நிதிமன்றத்தை அணுகியபோது தகவல் தெரிவிக்காதது ஏன் என கேரள அரசிடம் மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் விளக்கம் கோரியுள்ளார்.
குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதை தவிர கேரளாவுக்கு வேறு வழியில்லை என அம்மாநில முதல்வர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் சில மாநில அரசுகள் அறிவித்துள்ளன. அதுபோலவே குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் கடந்த டிசம்பர் 31-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் கேரள அரசின் தீர்மானம் அரசியல் சாசனப்படியோ அல்லது சட்டப்படியோ செல்லாது என கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்து இருந்தார்.
எனினும் கேரள அரசு குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது. இதுகுறித்து மாநில அரசிடம் விளக்கம் கேட்கப்படும் என ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அவர் கேரள மாநில அரசிடம் விளக்கம் கோரி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆளுநர் அலுவலகத்தில் இருந்து கேரள அரசின் தலைமைச் செயலாளரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. அதில், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக உச்ச நிதிமன்றத்தை அணுகியபோது தகவல் தெரிவிக்காதது ஏன் என விளக்கம் கோரப்பட்டுள்ளது.