

சீரடியில் உள்ள சாய்பாபா கோயில் குறித்து சிவசேனா சர்ச்சை எழுப்பி வரும்நிலையில் இதனை கண்டித்து அங்கு இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம் சீரடியில் சாய்பாபா கோயில் அமைந்துள்ளது. இங்கு நாடுமுழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். கடந்த 2018-ம் 100 விழா கொண்டாடப்பட்டபோது குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உட்பட ஒரு கோடிக்கும் அதிகமானோர் அங்கு வருகை தந்தனர்.
இந்தநிலையில் சாய்பாபாவின் பிறப்பிடம் சீரடி அல்ல, பாத்ரி எனக் கூறி சிவசேனா பிரச்சாரம் செய்து வருகிறது. அங்கு சாய்பாபாவுக்கு சிறிய கோயில் உள்ளது. இந்தநிலையில் மகாராஷ்டிர முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்ற பிறகு பாத்ரியில் உள்ள சாய்பாபா கோயிலின் வளர்ச்சிக்காக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார்.
சீரடி கோயிலுக்கு எதிராக சிவசேனா செயல்படுவதாக சாய்பாபா பக்தர்கள் புகார் கூறியுள்ளனர். சீரடி அறக்கட்டளையும் உத்தவ் தாக்ரேவின் செயலுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
சிவசேனாவுக்கு எந்த தொகுதி பாஜக எம்.பி. வி.கே. பாட்டீல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சாய்பாபா கோயிலுக்கு எதிராக சிவசேனா செயல்படுவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. அதுபோலவே சிவசேனாவின் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியும், இது தேவையற்ற சர்ச்சை என கருத்து தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் சாய்பாபா கோயில் அமைந்துள்ள சீரடியில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. சீரடியில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. வாகனப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
எனினும் சாய்பாபா கோயில் வழக்கம்போல் திறக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வழக்கம்போல் வழிபாடு நடத்தி வருகின்றனர்.