Last Updated : 19 Jan, 2020 11:53 AM

 

Published : 19 Jan 2020 11:53 AM
Last Updated : 19 Jan 2020 11:53 AM

ஹர்திக் படேலுக்கு 24-ம் தேதிவரை காவல்; பாஜக தொடர்ந்து சீண்டுகிறது: பிரியங்கா காந்தி சாடல்

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி

புதுடெல்லி

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹர்திக் படேல் தேசவிரோத வழக்கில் ஆஜராகத் தவறியதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பெயரில் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் போலீஸார் நேற்று கைது செய்தனர்.

ஹர்திக் படேலை கைது செய்தமைக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹர்திக் படேல் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் அரசுக்கு எதிராகவும், சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர் மீது தேசவிரோத வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஹர்திக் படேல் 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 2018-ம் ஆண்டு இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதில் ஹர்திக் படேல் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார்.

ஹர்திக் படேல் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட காட்சி : படம் ஏஎன்ஐ

அதன்பின் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ஹர்திக் படேல் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
விசாரணை நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக ஹர்திக் படேல் ஆஜராகவில்லை. இதனால், கூடுதல் அமர்வு நீதிபதி பி.ஜி. ஞானேந்திரா ஹர்திக் படேலுக்கு ஜாமீனில் வெளிவராத கைது வாரண்ட்டை பிறப்பித்தார்.

இதையடுத்து, போலீஸார் ஹர்திக் படேலை தீவிரமாகத் தேடியதில் அகமதாபாத் மாவட்டம், வீரம்கம் வட்டத்தில் இருப்பதை கண்டுபிடித்து அவரைக் கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் இரவோடு இரவாக ஆஜர்படுத்திய நிலையில் அவரை வரும் 24-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஹர்திக் படேலை போலீஸார் கைது செய்தமைக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் பாஜகவைக் கண்டித்துள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில், " விவசாயிகளின் உரிமைக்காகவும், இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காகவும் போராடிவரும் ஹர்திக் படேலை பாஜக தொடர்ந்து துன்புறுத்தி, சீண்டி வருகிறது.

அவர் சார்ந்திருக்கும் பட்டிதார் சமூகத்தின் குரலாக ஹர்திக் படேல் இருக்கிறார், அந்த மக்களுக்காக வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தாருங்கள் என்று கேட்கிறார், மாணவர்களுக்கு உதவித் தொகை கேட்கிறார். விவசாயிகளை ஒன்று திரட்டி இயக்கமாகக் கொண்டு செல்கிறார். ஆனால், ஹர்திக் படேல் செய்வதையெல்லாம் பாஜக தேசத் துரோகம் என்று அழைக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x