Last Updated : 19 Jan, 2020 11:27 AM

 

Published : 19 Jan 2020 11:27 AM
Last Updated : 19 Jan 2020 11:27 AM

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த முடியாது என எந்த மாநிலமும் மறுக்க முடியாது: கபில் சிபல் விளக்கம்

காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் : கோப்புப்படம்

கோழிக்கோடு

குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை அமல்படுத்த முடியாது என்று எந்த மாநிலமும் மறுக்க முடியாது. அவ்வாறு செய்வது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களும், பாஜக ஆட்சி செய்யத மாநிலங்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தையும், என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

குறிப்பாகக் கேரளா, பஞ்சாப் மாநில அரசுகள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கூறி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது.

இந்த சூழலில் கேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் கேரள இலக்கிய திருவிழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் நேற்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எந்த மாநிலமும் அமல்படுத்தமாட்டோம் என்று கூற முடியாது. அவ்வாறு எந்த மாநில அரசாவது கூறினால் அது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. சிஏஏவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கலாம், சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றலாம், சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மத்திய அரசிடம் கேட்கலாம்.

ஆனால், நடைமுறைப்படுத்த முடியாது என்று கூற முடியாது. அவ்வாறு கூறினால் அரசியலமைப்புச் சட்டரீதியாக பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும்.

என்ஆர்சி என்பது என்பிஆர் அடிப்படையாகக் கொண்டது. என்பிஆர் நடைமுறைப்படுத்துவது உள்ளூர் பதிவாளர்.அந்த பதிவாளர் எங்கிருந்து நியமிக்கப்படுவார், யார் நியமிப்பார் என்றால் மாநில அரசுதான் நியமிக்க வேண்டும்.

ஆனால், மத்திய அரசின் பணிக்கு மாநில அரசு அதிகாரிகளைப் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்று கூற முடியுமா. நடைமுறைக்கு இவ்வாறு கூறுவது சாத்தியமாகாது, அவ்வாறு செய்யவும் முடியாது. அவ்வாறு மாநில அரசு கூறினால் அரசியலமைப்பு ரீதியாக மாநில அரசுக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கும். ஏனென்றால் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டது.

குடியுரிமைத் திருத்தச்சட்டத்துக்கு எதிராக நடக்கும் போராட்டம் என்பது மக்களுக்கும் தலைவர்களுக்கும் இடையே நடக்கிறது. இந்த போராட்டத்தை மாணவர்கள், ஏழைமக்கள், நடுத்தர மக்கள் எடுத்து நடத்தி, அரசியல் கட்சிகள் தலையீடு இல்லாமல் இருக்கிறது. அதற்காக நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்.இந்த போராட்டம் உலகளவிலும், உள்நாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இது அரசியலல்ல, இது உண்மையானது என்று மக்கள் உணர்ந்துவருகிறார்கள்.

போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள், மக்கள், நடுத்தர வகுப்பினர் யாரும் எந்த கட்சியோடும் தொடர்பில்லாதவர்கள்
போராட்டத்தில் பங்கேற்ற மக்கள் தங்கள் ஆதங்கத்தை, வேதனையை, வருத்தத்தை, கவலையை வெளிப்படுத்தினார்கள், எதிர்கால இந்தியாவைப் பற்றி வருத்தப்படுகிறார்கள். ஒவ்வொருவரும் வளர்ச்சியை வேண்டுகிறார்கள், பிரதமர் மோடி என்ன செய்துவிட்டார். நாட்டின் வளர்ச்சியைக் காட்டிலும் சொந்த வளர்ச்சிக்குத்தான் செய்துள்ளார்.

இவ்வாறு கபில் சிபல் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x