Last Updated : 19 Jan, 2020 10:00 AM

 

Published : 19 Jan 2020 10:00 AM
Last Updated : 19 Jan 2020 10:00 AM

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மெகா கூட்டணி சார்பில் முதல்வர் வேட்பாளராக மீரா குமாரை நிறுத்த காங். முயற்சி

பிஹாரில் மெகா கூட்டணி சார்பில் முதல்வர் வேட்பாளராக மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமாரை நிறுத்த காங்கிரஸ் முயற்சி செய்து வருவதாகத் தெரி கிறது.

பிஹாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார்.

இந்நிலையில், டெல்லியை அடுத்து பிஹார் சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் என்டிஏ கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோல, ஆர்ஜேடி தலைமையிலான மெகா கூட்டணி இந்த தேர்தலிலும் தொடர்கிறது. இக்கூட்டணியில் காங்கிரஸ், பிஹார் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, என்டிஏவின் முன்னாள் உறுப்பினரான ராஷ்ட்ரிய லோக் சமதா (ஆர்எஸ்எல்பி) மற்றும் விகாஸ் இன்ஸான் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தக் கூட்டணி சார்பில் லாலுவின் மகனும் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி பிரசாத் யாதவை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த ஆர்ஜேடி முயற்சிக்கிறது. இதற்கு விகாஸ் இன்ஸான் கட்சி மட்டுமே ஆதரவளிக்கிறது. மற்ற கட்சிகள், தேஜஸ்விக்கு அனுபவம் இல்லை எனக் கூறி அவரை முதல்வர் வேட்பாளராக ஏற்க மறுக்கின்றன. இதனிடையே, மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமாரை மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக்க காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது. இவரை லாலு கட்சியினரைத் தவிர மற்றவர்கள் ஏற்பார்கள் எனவும் காங்கிரஸ் நம்புகிறது.

முன்னாள் துணைப் பிரதமர் ஜெகஜீவன்ராமின் மகளான மீரா குமார், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். பிஹாரின் ஆரா தொகுதி எம்.பி.யாக பலமுறை இருந்தவர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்தவர். இக்கூட்டணியின் 2-வது ஆட்சியில் மக்களவை தலைவராகவும் இருந்தார்.

எனவே, மீரா குமாரை மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக்க காங்கிரஸ் விரும்புகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியானதும், ராஞ்சி சிறையில் இருக்கும் லாலுவிடம் காங்கிரஸ் கட்சி இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ஜிதன்ராம் மாஞ்சி கூறும்போது, “முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்ய அனைத்து கட்சிகள் அடங்கிய ஒருங்கிணைப்புக்குழு அமைக்க வேண்டும். துணை முதல்வராக முன்னிறுத்தவும் இரண்டு வேட்பாளர்களை தேர்வு செய்யலாம். முஸ்லிம் மற்றும் தலித் சமூகத்தினர் நிறுத்தப்பட்டால் அவ்விரு தரப்பினரின் பெரும்பாலான வாக்குகள் மெகா கூட்டணிக்கு கிடைக்கும்” என்றார்.

ஆர்ஜேடி தலைமையிலான மெகா கூட்டணியைச் சேர்ந்த ஆர்எஸ்எல்பி தலைவர் உபேந்திர குஷ்வாஹாவும் இக்கருத்தை ஆமோதிப்பதாகக் கூறியுள்ளார். கடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 43-ல் வென்ற காங்கிரஸ், இந்த முறை கூடுதல் இடங்கள் வழங்குமாறு லாலுவிடம் வலியுறுத்த திட்டமிட்டுள்ளது. மக்களவை தேர்தலில், மெகா கூட்டணி சார்பில் கிஷண்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் முகம்மது ஜாவேத் மட்டும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x