

ஹெல்மெட் அணியாமல் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மத்தியபிரதேச மாநிலத்தில் நூதன தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மத்தியபிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் சாலை பாதுகாப்பு வாரவிழா கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில் சாலைவிதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி போக்குவரத்து போலீஸார் சார்பில் நடத்தப்பட்டது. இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை போக்குவரத்து போலீஸார் விநியோகம் செய்து வந்தனர்.
இந்நிலையில் ஹெல்மெட்அணியாமல் மோட்டார் சைக்கிளில் வருபவர்களை, போக்குவரத்து போலீஸார் நிறுத்தி அவர்களுக்கு நூதன தண்டனை வழங்கி வருகின்றனர்.
ஹெல்மெட் அணியாமல் பிடிபட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் ஏன் ஹெல்மெட் அணியவில்லை? என்ற காரணத்தை சுருக்கமாக 100 வார்த்தைகளில் கட்டுரையாக எழுதித் தருமாறு அவர்களுக்கு நூதன தண்டனையை போலீஸார் வழங்கி வருகின்றனர்.
மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும் அவர்களுக்கு விளக்கப்பட்டது.
இதுகுறித்து கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர் பிரதீப் சவுகான் கூறும்போது, “சாலைப் பாதுகாப்பு வாரத்தையொட்டி ஹெல்மெட் அணியாமல் வந்த ஏராளமான நபர்களை தடுத்து நிறுத்தி ஹெல்மெட்டின் அவசியத்தை எடுத்துக்கூறி வருகிறோம்.
மேலும் அவர்களை 100 வார்த்தையில் கட்டுரை எழுதித் தருமாறு நூதன தண்டனை வழங்கப்பட்டது. அவர்கள் வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணிய வேண்டிய அவசியத்தை இதன்மூலம் புரிந்துகொள்வார்கள்” என்றார்.