

ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் அரசியலுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. தேசத்தில் உள்ள 130 கோடி மக்களின் கலாச்சார, அறவியல் வாழ்க்கை மேம்பாட்டுக்காகவே உழைக்கிறோம் என்று மோகன் பாகவத் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் அதன் தொண்டர்களுக்கு 4 நாட்கள் வகுப்புகள் நடந்தன.
நிறைவு நாளான இன்று அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்றுப் பேசியதாவது:
''பல்வேறு தரப்பட்ட மக்களும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்திருக்கிறார்கள். அதில் அரசியலில் ஈடுபட்டுள்ளோரும், அரசியல் கட்சி நடத்துபவர்கள்கூட இதில் இருக்கிறார்கள்.
எங்களைப் பொறுத்தவரை தேர்தல் ஒரு பொருட்டல்ல. கடந்த 60 ஆண்டுகளாக தேசத்தின் மதிப்புகளை நாங்கள் காக்கும் வகையில் உழைத்து வருகிறோம்.
பாஜகவை மறைமுகமாக ஆர்எஸ்எஸ் அமைப்பு கட்டுப்படுத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டை நான் முழுமையாக மறுக்கிறேன். ஆர்எஸ்எஸ் அமைப்பு 130 கோடி மக்களின் நலன்களுக்காகப் பாடுபடுகிறது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் முகாம், பயிற்சிக்கு ஒருவர் வராமல் கூட அவர் தன்னை ஆர்எஸ்எஸ் அமைப்பின் தொண்டர் என்று கூறிக் கொள்ளலாம். ஆனால், அவருக்கு தேச ஒற்றுமை குறித்த சித்தாந்தம் இருக்க வேண்டும்.
பூமிதான இயக்கத்தின் நிறுவனர் வினோபா பாவே, முன்னாள் தலைவர் கோல்வால்கர் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். இதில் வினோபா ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுப்பினர் இல்லாவிட்டாலும், ஒரே மாதிரியான சித்தாந்தத்தைக் கொண்டிருந்தார்.
தலைசிறந்த அறிவாளிகள், அறிவுஜீவிகள், சமூகச் சீர்திருத்தவாதிகள் எங்கள் அமைப்பில் ஒரு அங்கமாக இல்லாவிட்டாலும், உறுப்பினராக இல்லாவிட்டாலும் கூட, எங்களின் சித்தாந்தத்தைப் பெற்றிருந்தார்கள். அதுதான் எங்களின் வெற்றியாகும்.
ஒருவரின் சித்தாந்தத்தை ஒருவர் பரப்ப விரும்பினால், அதற்கு அதிகாரம் முக்கியம். ஆன்மிகமும், புத்திசாலித்தனமும் அதிகாரத்துக்கு அவசியம் என்று சுவாமி விவேகானந்தர் எப்போதும் கூறுவார். ஆதலால், சக்தி நிறைந்தவர்களாக, வளமாக, உடல் ஆரோக்கியமாக இருக்க முயல வேண்டும்.
கடந்த 1925-ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கப்பட்டபோது சிலர் மட்டுமே அதில் இருந்தார்கள். ஆனால், இன்று அந்த அமைப்பு 1.30 லட்சம் கிளைகளுடன் நாடு முழுவதும் பரவியுள்ளது. இதற்கு தேசத்தை வலிமையாகக் கட்டமைக்க வேண்டும் என்ற அர்ப்பணிப்புதான் காரணம்.
அதுமட்டுமல்லாமல் இந்திய அரசியலமைப்பைக் கடைப்பிடித்து, சொந்த நலன்கள் இல்லாமல், தேசத்தின் நலனுக்காகச் சேவை செய்ய விரும்பும் அனைவரையும் ஆர்எஸ்எஸ் அழைத்தது. இந்து மதம், கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றுக்காக ஆர்எஸ்எஸ் ஏராளமான பணிகளைச் செய்துள்ளது.
இந்தியர்கள் அனைவருமே இந்துக்கள்தான். நமது முன்னோர்களும் இந்துக்கள்தான். பல்வேறு நாடுகள் பன்முகத்தன்மையில் இருந்து ஒற்றுமை என்ற கோஷத்தை முன்வைத்தன. ஆனால், இந்தியாவில் ஒற்றுமையில் பன்முகத்தன்மை இருக்கிறது''.
இவ்வாறு மோகன் பாகவத் தெரிவித்தார்.