

லண்டனில் அம்பேத்கர் வசித்த வீட்டை மாகாராஷ்டிர அரசு நேற்று வாங்கியது.
சட்டமேதை அம்பேத்கர் லண்ட னில் உயர்கல்வி பயின்றபோது, 1921 மற்றும் 1922-ம் ஆண்டுகளில் வடமேற்கு லண்டனில் கிங் ஹென்றி சாலையில் 10-ம் எண் வீட்டில் வசித்து வந்தார். 3 மாடி கள் கொண்ட இந்த வீடு 2,050 சதுர அடி பரப்பளவு கொண்டது. கடந்த ஆண்டு இந்த வீட்டை அதன் உரிமையாளர் விற்பனை செய்யவுள்ளதாக அறிந்த மகாராஷ்டிர அரசு அதை வாங்க முடிவு செய்தது. இதையடுத்து இந்த வீடு ரூ.31 கோடிக்கு வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
பல்வேறு நடைமுறைச் சிக்கல் கள் காரணமாக இப்பணியில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த வீடு மகாராஷ்டிர அரசால் நேற்று வாங்கப்பட்டது. மகாராஷ்டிர சமூக நீதித்துறை அமைச்சர் ராஜ் குமார் படோலியும் வீட்டின் உரிமை யாளரும் இதற்கான ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனர்.
இந்த வீடு சர்வதேச நினைவக மாக மாற்றப்பட உள்ளது. இதுகுறித்து பிரிட்டனில் செயல்படும் அம்பேத்கர் வழி மற்றும் புத்த மத அமைப்புகளின் கூட்டமைப்பு தலைவர் சந்தோஷ் தாஸ் “இந்த வீடு கல்வி மற்றும் கலாச்சார மையமாக மாற்றப்படும். பிரிட்டனில் வசிக்கும் இந்தியர்கள், இங்கு உயர்கல்விக்கு வரும் இந்திய மாணவர்கள் மற்றும் அம்பத்கரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்கள் இங்கு வந்து செல்லும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொளப்படும். இதன் பிறகு இந்த வீடு பார்வையாளர்களுக்கு திறக்கப்படும்” என்றார்.
இந்த வீட்டை வாங்குவதற்காக லண்டன் சென்ற மகாராஷ்டிர அமைச்சர் ராஜ்குமார் படோலி கூறும்போது, “இது வரலாற்று சிறப்பு மிக்கத் தருணம். இது வெறும் வீடு மட்டுமல்ல, இந்தியர் அனைவரின் உணர்வுப்பூர்மான இடம்” என்றார்.