

குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதை தவிர கேரளாவுக்கு வேறு வழியில்லை என அம்மாநில முதல்வர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் சில மாநில அரசுகள் அறிவித்துள்ளன. அதுபோலவே குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் கடந்த டிசம்பர் 31-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறும்போது, “நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தை அமல்படுத்த வேண்டியது மாநில அரசுகளின் அரசியல் சாசனக் கடமை” என கூறியிருந்தார்.
கேரள அரசின் தீர்மானம் அரசியல் சாசனப்படியோ அல்லது சட்டப்படியோ செல்லாது என கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘‘குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதை தவிர கேரளாவுக்கு வேறு வழியில்லை. நமது சட்டம் மற்றும் நீதிமுறையை பற்றி தெரியாமல் பலர் பேசுகின்றனர். நீங்கள் உங்கள் அறிவுத்திறனை காட்டி வாதிடலாம். உச்ச நீதிமன்றத்துக்கு சென்று வழக்கு தொடரலாம். ஆனால் குடியுரிமைச் சட்டம் மத்திய அரசின் பட்டியலில் உள்ளது. இதில் மாநில அரசுக்கு எந்த பங்கும் இல்லை. நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்தை அமல்படுத்த வேண்டிய கடமை மாநில அரசுக்கு உண்டு,’’ எனக் கூறினார்.