Last Updated : 18 Jan, 2020 04:00 PM

 

Published : 18 Jan 2020 04:00 PM
Last Updated : 18 Jan 2020 04:00 PM

ஜம்மு காஷ்மீர் முழுவதும் மீண்டும் ப்ரீபெய்ட் மொபைல் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் சேவை

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் முழுவதும் 5 மாதங்களுக்குப் பின் மீண்டும் ப்ரீபெய்ட் மொபைலுக்கான வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் சேவை வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இணையதள உரிமை என்பது அடிப்படை உரிமையோடு தொடர்புடையது என்று கடந்த வாரம் கடுமையான வார்த்தைகளால் கண்டித்த உச்ச நீதிமன்றம், ஒரு வாரத்துக்குள் ஜம்மு காஷ்மீரில் இணையதளம் ரத்து செய்தது தொடர்பாக அதிகாரிகள் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

அந்த உத்தரவையடுத்து ப்ரீபெய்ட் மொபைல் சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. 10 மாவட்டங்களில் 2ஜி இணையதள வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அதற்கு முன்பாக மாநிலம் முழுவதும் லேண்ட்லைன் தொலைப்பேசி இணைப்புகள், ப்ரீபெய்ட், போஸ்ட் பெய்ட் செல்போன் இணைப்புகள், இணையதள இணைப்புகளை அரசு ரத்து செய்தது.

அதன்பின் ஜம்மு காஷ்மீர் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டு, கடந்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

அங்கு இயல்புநிலை படிப்படியாகத் திரும்புவதையடுத்து, தொலைபேசி இணைப்புகள், போஸ்ட் பெய்ட் செல்போன் இணைப்புகள் படிப்படியாக வழங்கப்பட்டன.

ஆனால், இணையதள இணைப்புகள் மட்டும் வழங்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் பிறப்பித்த உத்தரவில், " அடுத்த ஒருவாரத்தில் ஜம்மு காஷ்மீரில் இணையதள இணைப்பு வழங்கப்படுவது குறித்து அரசு முடிவு எடுக்க வேண்டும்" என உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் 5 மாதங்களுக்குப் பின் ப்ரீபெய்ட் மொபைல் இணைப்புகளுக்கான எஸ்எம்எஸ், வாய்ஸ் கால் போன்றவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் அரசின் முதன்மைச் செயலாளர் மற்றும் செய்தித் தொடர்பாளர் ரோஹித் கன்சால் இன்று ஜம்முவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

''மிகக் கவனமான பரிசீலனைக்குப் பின், ஜம்மு காஷ்மீர் முழுவதும் ப்ரீ பெய்ட் மொபைல் இணைப்புகளுக்கான வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

போஸ்ட் பெய்ட் மொபைல் இணைப்புகளுக்கான 2-ஜி மொபைல் டேட்டா இணைப்புகள், பிராட்பேண்ட் இணைய சேவை ஜம்முவில் 10 மாவட்டங்களிலும், காஷ்மீரில் குப்வாரா, பந்திப்போரா மாவட்டங்களில் மட்டும் வழங்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவு இன்று(18-ம்தேதி) முதல் நடைமுறைக்கு வரும்.

ஆனால் மொபைல் இணைய சேவை பட்காம், கன்டர்பால், பாரமுல்லா, ஸ்ரீநகர், குல்காம், ஆனந்தகாக், ஷோபியான், புல்வாமா ஆகிய மாவட்டங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் சமூக ஊடகங்கள் சேவையும் முடக்கப்பட்டுள்ளன''.

இவ்வாறு ரோஹித் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x