Published : 18 Jan 2020 03:22 PM
Last Updated : 18 Jan 2020 03:22 PM

குடியுரிமைச் சட்டத்தை ஒன்றிணைந்து எதிர்ப்போம்: மம்தாவுக்கு சிதம்பரம் அழைப்பு

கொல்கத்தா

குடியுரிமைச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்டவற்றை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குடியுரிமைச் சட்டம் தொடர்பான போராட்டத்தை ஒருங்கிணைக்கும் வகையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் குடியுரிமைச் சட்டத்துடன், ஜேஎன்யு மாணவர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

காங்கிரஸ் ஏற்பாடு செய்த இந்த கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை.

இந்த விவகாரத்தில் தனித்தே போராடுவோம் என மம்தா பானர்ஜி கூறியிருந்தார். இந்தநிலையில் கொல்கத்தா சென்ற மூத்த காங்கிரஸ் தலைவர் சிதம்பரம், மம்தாவின் பெயரை குறிப்பிடாமல் இதுபற்றி பேசினார். இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ப.சிதம்பரம் கூறியதாவது:

குடியுரிமைச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்டவற்றை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும். மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கையை அம்பலப்படுத்தி மக்கள் ஆதரவை பெறுவதற்கு எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமை மிக அவசியம். காங்கிரஸ் தலைமையில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து மத்திய அரசின் மதவாத செயல்பாடுகளுக்கு எதிராக போராட வேண்டும்.’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x