

நிர்பயா கூட்டுப்பலாத்கார வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் 4 பேரில் ஒருவர், தான் சம்பவம் நடந்தபோது பதின்பருவத்தைச் சேர்ந்தவர் என்று தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் வரும் 20-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் 23 வயதான மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கீழே வீசப்பட்டார். பாதிக்கப்பட்ட மாணவிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா மற்றும் அக்சய் குமார் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து டெல்லி விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரித் தாக்கல் செய்த மறு ஆய்வு மனு, சீராய்வு மனு ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் தாக்கல் செய்த கருணை மனுவையும் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் நிராகரித்தார். இதைத் தொடர்ந்து குற்றவாளிகள் 4 பேருக்கும் பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா, பாலியல் பலாத்கார சம்பவம் நடந்தபோது தான் பதின்பருவத்தைச் சேர்ந்தவராக இருந்ததேன், ஆனால் அதைக் கருத்தில் கொள்ளாமல் தனக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது இதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
ஆனால், அந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கைக்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லை எனக் கூறி அந்தமனுவைத் தள்ளுபடி செய்தது.
வரும் பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்குள் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்பட உள்ளது. இந்த சூழலில் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.
அதாவது, குற்றச்சம்பவம் நடந்தபோது, தான் பதின்பருவத்தைச் சேர்ந்தவராக இருந்தேன். ஆனால் அதைக் கருத்தில் கொள்ளாமல் தனக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை செல்லாது என மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷன், ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் கொண்ட அமர்வில் வரும் 20-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.