Last Updated : 18 Jan, 2020 02:31 PM

 

Published : 18 Jan 2020 02:31 PM
Last Updated : 18 Jan 2020 02:31 PM

வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்குவதை எதிர்ப்பவர்கள் அந்தமான் சிறைக்குச் செல்லட்டும்: சஞ்சய் ராவத் காட்டம்

வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதை எதிர்க்கும் எந்த சித்தாந்தத்தைச் சேர்ந்தவர்களும் அந்தமான் சிறைக்குச் சென்று 2 நாட்கள் தங்க வேண்டும் என்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத் மும்பையில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''பாகிஸ்தானியர்கள், வங்கதேசத்தினர், ரோஹிங்கியா மக்கள் இந்தியாவுக்குள் எளிதாக நுழைந்து விடுகிறார்கள். ஆனால், கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவிக்கும், மகாராஷ்டிரா எல்லைக்கும் இடையே தொடர்ந்து பிரச்சினை நீடித்து வருகிறது. இருதரப்பு மக்களும் செல்வதில் சிக்கல் இருக்கிறது. இது தவறானது. நாம் அனைவரும் இந்தியர்கள். நான் பெலகாவிக்குச் சென்று மக்களைச் சந்தித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கப் போகிறேன்.

வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதை பலரும் எதிர்க்கிறார்கள். அவ்வாறு எதிர்ப்பவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த சித்தாந்தத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அந்தமானில் சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த சிறைக்குச் சென்று இரு நாட்கள் தங்கி இருக்க வேண்டும். அப்போதுதான் சாவர்க்கர் அனுபவித்த வேதனைகள், தியாகங்கள் தெரியவரும். நாட்டுக்கு அவர் செய்த பங்களிப்பை உணர முடியும்" எனத் தெரிவித்தார்.

சிவசேனா தலைவர் ஆதித்யா தாக்கரே : படம் ஏஎன்ஐ

இதற்கிடையே கடந்த வாரம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குறித்து சஞ்சய் ராவத் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். அந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கடும் எதிர்ப்புக் கிளம்பிய நிலையில், தனது கருத்தை சஞ்சய் ராவத் வாபஸ் பெற்றார்.

சஞ்சய் ராவத்தின் கருத்தால் மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்படும் சூழல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இதுகுறித்து முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனும் அமைச்சருமான ஆதித்யா தாக்கரே இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், " எந்த அர்த்தத்தில் சஞ்சய் ராவத் இந்திரா காந்தி குறித்துப் பேசினார், எவ்வாறு புரிந்து கொள்ளப்பட்டது எனத் தெரியவில்லை. ஆனால், சிவசேனா-காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருக்கிறது. இரு கட்சிகளும் இணைந்து மாநிலத்தின் வளர்ச்சிக்காக உழைக்கிறோம். பல்வேறு விஷயங்களில் நாங்கள் முரண்பட்டு இருக்கலாம். ஜனநாயகத்தில் அவ்வாறு இருப்பதில் தவறில்லை" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x