

நிர்பயா கூட்டுப் பலாத்கார வழக்கில் மூத்த பெண் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கூறிய ஆலோசனைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி, இந்த ஆலோசனையைக் கூற இந்திரா ஜெய்சிங்கிற்கு எவ்வளவு துணிச்சல் இருக்கும் எனக் கேட்டுள்ளார்.
கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் 23 வயதான மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கீழே வீசப்பட்டார். பாதிக்கப்பட்ட மாணவிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா மற்றும் அக்சய் குமார் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து டெல்லி விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்த மறு ஆய்வு மனு, சீராய்வு மனு ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் தாக்கல் செய்த கருணை மனுவையும் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் நிராகரித்தார்.
இதைத் தொடர்ந்து குற்றவாளிகள் 4 பேருக்கும் பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இந்தச் சூழலில் மூத்த பெண் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் ட்விட்டரில் நிர்பயாவின் தாயார் ஆஷா தேவியைக் குறிப்பிட்டு கருத்து தெரிவித்திருந்தார்.
அதில், "நிர்பயாவின் தாயா ஆஷா தேவியின் வேதனை, துயரத்தை முழுமையாக அறிகிறேன், உணர்கிறேன். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, தனது கணவர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினியை மன்னித்துவிட்டார்.
அந்தச் சம்பவத்தை உதாரணமாக எடுத்துக்கொண்டு, ஆஷா தேவியும், நிர்பயா பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை மன்னிக்க வேண்டும். நிர்பயாவுக்காக நாம் மரண தண்டனை கேட்கவில்லை. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். ஆனால், மரண தண்டனைக்கு எதிரானவர்கள்" எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் மூத்த பெண் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் அளித்த ஆலோசனையைக் கடுமையாக எதிர்த்து நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி கண்டித்துள்ளார்.
ஆஷா தேவி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் இதுபோன்ற ஆலோசனையைக் கூறுவதற்கு எவ்வாறு துணிச்சல் வந்தது என்பதை என்னால் நம்பமுடியவில்லை. நான் அவரைப் பல முறை உச்ச நீதிமன்றத்தில் சந்தித்திருக்கிறேன். ஒருமுறைகூட என்னுடைய நலன் பற்றிக் கேட்டதில்லை, ஆனால், இப்போது குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பரிந்து பேசுகிறார். இதுபோன்ற மனிதர்களால்தான் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பிக்கிறார்கள். பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இதுபோன்ற ஆலோசனையை எனக்கு வழங்குவதற்கு இந்திரா ஜெய்சிங் யார்? இந்த நாடே குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று விரும்புகிறது. இப்படிப்பட்ட மனிதர்கள் இருப்பதால்தான், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதில்லை" எனத் தெரிவித்தார்.