Last Updated : 18 Jan, 2020 11:03 AM

 

Published : 18 Jan 2020 11:03 AM
Last Updated : 18 Jan 2020 11:03 AM

மோடி தன்னைத் தானே உருவாக்கிக் கொண்டவர், ராகுல் காந்தி அவர் முன்னால் நிற்க முடியாது: வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா பேச்சு

திருவனந்தபுரம்

கேரள இலக்கிய விழாவில் கலந்து கொண்டு பேசிய வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா, காங்கிரஸ் கட்சி விடுதலைப் போராட்ட சக்தியிலிருந்து வெறும் குடும்ப நிறுவனமாக சீரழிந்ததில் எழுந்ததுதான் இந்துத்துவாவும் ஆதிக்கவாதமும் என்று பேசியுள்ளார்.

‘கடினமாக உழைக்கும்- தன்னைத்தானே உருவாக்கிக் கொண்டுள்ள நரேந்திர மோடிக்கு முன்னால் பரம்பரை ஆட்சியின் 5ம் தலைமுறை ராகுல் காந்திக்கு நிச்சயம் வாய்ப்பு கிடையாது என்று பேசியுள்ளார் ராமச்சந்திர குஹா.

வயநாடு எம்.பி.யாக ராகுல் காந்தியைத் தேர்ந்தெடுத்தது சீரழிவுக்குரியது என்றும் மக்கள் வாக்கெடுப்புத் தெரிவை விமர்சித்தார் ராமச்சந்திர குஹா.

“கேரளா, ஓ இந்த மாநிலம் இந்தியாவுக்காக பல பெருமைகளைச் சேர்த்திருக்கிறது, ஆனால் ராகுல் காந்தியை நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுத்ததன் மூலம் மிகப்பெரிய தவறிழைத்து விட்டீர்கள். ராகுல் காந்திக்கு எதிராக தனிப்பட்ட முறையில் எனக்கு எந்தப் பகையும் இல்லை. ராகுல் காந்தி நயநாகரிகமான நபர், நல்ல முறையில் தன்னை நடத்திக் கொள்பவர், ஆனால் இளம் இந்தியாவுக்கு பரம்பரை ஆட்சியின் 5ம் தலைமுறை தலைவர் தேவையில்லை என்பதுதான். 2024-ல் மலையாளிகளான நீங்கள் மீண்டும் ராகுல் காந்தியை தேர்வு செய்தால் அது நரேந்திர மோடிக்குத்தான் சாதகமாக அமையும்.

நரேந்திர மோடிக்கு இருக்கும் மிகப்பெரிய சாதகமே அவர் ராகுல் காந்தியாக இல்லை என்பதே. நரேந்திர மோடி தன்னைத்தானே உருவாக்கிக் கொண்டவர். 15 ஆண்டுகள் அவர் ஒரு மாநிலத்தை ஆட்சி புரிந்தவர். மோடிக்கு நிர்வாக அனுபவம் உள்ளது, மோடி வியத்தகு கடின உழைப்பாளி, விடுமுறைகளை ஐரோப்பாவில் கழிப்பவரல்லர். நம்புங்கள் நான் சீரியஸாகத்தான் இதனைக் குறிப்பிடுகிறேன்.

ராகுல் காந்தி கூடுதல் அறிவாளி என்றாலும், மோடியை விட கடின உழைப்பாளியாக இருந்தாலும் விடுமுறைகளை ஐரோப்பாவில் கழிப்பவராக இல்லாமல் இருந்தாலும், குடும்பத்தின் 5ம் தலைமுறை நபருக்கும் தன்னைத்தானே உருவாக்கிக் கொண்டவருக்கும் வேறுபாடு உள்ளது.

இந்தியா மேலும் ஜனநாயக நாடாகி வருகிறது, நிலப்பிரபுத்துவத்திலிருந்து மீண்டு வருகிறது, ஆனால் நேரு குடும்பம் இதனை உணர்ந்ததாகத் தெரியவில்லை. சோனியா நீங்கள் டெல்லியில் இருக்கிறீர்கள் ஆனால் உங்கள் ராஜ்ஜிய்ம் மெல்ல மெல்ல சுருங்கி வருகிறது, ஆனால் உங்களுக்கு ஜால்ரா போடுபவர்களோ நீங்கள்தான் மன்னர் என்று புகழ்ந்து வருகின்றனர்.

இன்றைய தேசிய மட்ட விவாதத்தைப் பாருங்கள், ஏன் எதற்கெடுத்தாலும் பாஜகவும் மோடியும் நேருவின் கொள்கைகளை விமர்சிக்கின்றனர்? காஷ்மீர் விவகாரத்தில் நேரு என்ன செய்துவிட்டார், சீனாவுடன் என்ன செய்துவிட்டார், முத்தலாக்கில் என்ன செய்து விட்டார் என்று மோடி தொடர்ந்து நேருவை விமர்சிக்கக் காரணம் என்ன? அது ராகுல் காந்தி என்ற ஒருவரால்தான்.

ராகுல் காந்தி அரசியலில் இல்லையெனில் மோடி தன் கொள்கைகளையும் அது எப்படி தோல்வியடைந்தது என்பது பற்றியும் பேசியாக வேண்டும்.

விடுதலைப் போராட்டக் காலத்தில் பெரிய சக்தியாக இருந்த காங்கிரஸ் இன்று பரிதாபமாக குடும்ப நிறுவனமாக சீரழிந்துள்ளது. இதுதான் இந்துத்துவாவின், ஆதிக்கத்தின் எழுச்சிக்குத் தற்போது வழிவகுத்துள்ளது” இவ்வாறு பேசினார் ராமச்சந்திர குஹா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x