

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரை 2017-ல் பாலியல் பலாத்காரம் செய்ததாக உன்னாவ் தொகுதியைச் சேர்ந்த முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான அனைத்து வழக்குகளையும் உத்தரபிரதேசத்திலிருந்து டெல்லி நீதிமன்றத்துக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கை விசாரித்து வந்த டெல்லி சிறப்பு நீதிமன்றம், செங்காருக்கு கடந்த ஆண்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் ரூ.25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்தத் தொகையில் ரூ.10 லட்சத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். தண்டனையை ரத்து செய்யக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் செங்கார் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த மனு நேற்று நீதிபதிகள் மன்மோகன், சங்கீதா திங்கரா செகால் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குல்தீப் செங்கார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடும்போது, "விசாரணை நீதிமன்றம் ரூ.25 லட்சத்தை ஜனவரி 20-ம் தேதிக்குள் டெபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அந்த அளவுக்குப் பணம் குல்தீப்பிடம் இல்லை. அவருக்கு திருமண வயதில் இரு மகள்கள் இருப்பதால், உடனடியாக அந்தப் பணத்தை வழங்க முடியாது. அவகாசம் வழங்க வேண்டும்" என்றார்.
இதையடுத்து செங்காருக்கு அவகாசம் வழங்க நீதிபதிகள் ஒப்புக்கொண்டனர். அப்போது நீதிபதிகள் கூறும்போது, " குல்தீப் செங்காருக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பில் ரூ.25 லட்சம் அபராதத்தில் உடனடியாக ரூ.10 லட்சத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இன்னும் 60 நாட்களில் எவ்விதமான நிபந்தனையும் இன்றி வழங்க வேண்டும். மீதமுள்ள ரூ.15 லட்சத்தை விசாரணை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யலாம்" என்று தெரிவித்தனர்.
மேலும் செங்காரின் மேல்முறை யீட்டு வழக்கில் சிபிஐ, பாதிக் கப்பட்ட பெண் ஆகியோர் தங்களது விளக்கத்தைப் பதிவு செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் வழக்கறிஞரிடம், செங்காரின் மேல்முறையீட்டு மனுவின் நகலை வழங்கவேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து வழக்கு மே 4–ம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டது.- பிடிஐ