

தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டோர் அரசு நிவாரணங்களைப் பெற ஆதார் கட்டாயம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
தீவிரவாத தாக்குதல், வகுப்பு கலவரம், எல்லை தாண்டிய துப்பாக்கிச்சூடு, கண்ணிவெடி தாக்குதல், வெடிகுண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டோர் அரசு நிவாரணங்களைப் பெற ஆதார் கட்டாயமாகும். தகுதியுள்ள பயனாளிகள் இதுவரை ஆதார் எண் பெறவில்லை என்றால் உடனடியாக ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்து பெற வேண்டும்.
குறிப்பிட்ட தாலுகாவில் ஆதார் பதிவு மையங்களே இல்லை என்றால் அந்த பகுதி பயனாளிகளுக்கு சில சலுகைகள் வழங்கப்படும். அவர்கள் ஆதாரை சமர்ப்பிக்கும் வரை வங்கி, அஞ்சலக கணக்கு புத்தகம், ஓட்டுநர் உரிமம், பான் அட்டை, ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், விவசாயிகள் பாஸ்புக், தேசிய ஊரக வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவை ஆவணங்களாக ஏற்றுக் கொள்ளப்படும்.
அரசு நிவாரண உதவி கோரும் பயனாளிகளின் விரல் ரேகை பதிவு தெளிவாக இல்லை என்றால் விழித்திரை ஸ்கேன் அல்லது முக அடையாளம் மூலம் அவர்களின் அடையாளம் உறுதி செய்யப்படும். ஒருவேளை அதிலும் குளறுபடிகள் ஏற்பட்டால் ஆதார் எண் சார்ந்த ஒருமுறை பாஸ்வேர்டு மூலம் பயனாளிகளின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்படும். அதிலும் குழப்பம் ஏற்பட்டால் கியூஆர் கோடு திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.