மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி கைது

மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி கைது
Updated on
1 min read

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறைத்தண்டனை பெற்று பரோலில் வெளியே வந்து தப்பியவர் கான்பூரில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

மும்பையில் உள்ள மொமின்புரா பகுதியை சேர்ந்தவர் ஜலீஸ்அன்சாரி. எம்பிபிஎஸ் படித்து டாக்டர் தொழில் பார்த்து வந்த இவர் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வடிவமைத்து கொடுப்பதில் தேர்ச்சி பெற்றவர்.

1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து நடந்த தீவிர விசாரணையில் இந்தியாவில் நடந்துள்ள சுமார் 52-க்கும் மேற்பட்ட குண்டு வெடிப்பு வழக்குகளில் இவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. மும்பையில் 2008-ல் நடந்தத் தாக்குதலிலும் இவருக்குத் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

ஏராளமான குண்டுவெடிப்பு வழக்குகளில் தொடர்பு இருப்பதால், போலீஸார் இவருக்கு ‘டாக்டர் பாம்’ என்றே பெயர் சூட்டி அழைத்து வந்தனர். தற்போது 68 வயதாகும் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், அவர் தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்று அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதையேற்று அவரை 21 நாட்கள் பரோலில் மும்பை சென்று வருவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அவர் தொழுகைக்கு சென்று விட்டு வருவதாக கூறி வீட்டை விட்டு புறப்பட்டு சென்றார். அதன் பிறகு அவர் தலைமறைவாகி விட்டார்.

இதனால் மும்பை போலீஸாரும், மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். இந்நிலையில் அவர் நேற்று உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் கைது செய்யப்பட்டார்.

மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரும், உத்தரபிரதேச மாநில சிறப்பு அதிரடிப் படையினரும் (எஸ்டிஎப்) இணைந்து டாக்டர் அன்சாரியைக் கைது செய்தனர். இதையடுத்து அவரை ஜெய்ப்பூர் மத்திய சிறைக்குஅழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. – பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in