Last Updated : 17 Jan, 2020 08:48 PM

 

Published : 17 Jan 2020 08:48 PM
Last Updated : 17 Jan 2020 08:48 PM

தவறான தகவல் அளித்தால் ரூ.1000 அபராதம்; என்பிஆர் முறைக்கு பாஜக ஆளாத மாநிலங்கள் கடும் எதிர்ப்பு: விளக்கம் அளித்த உள்துறை அமைச்சகம்

புதுடெல்லி

தேசிய மக்கள்தொகை பதிவேட்டைச் செயல்படுத்து குறித்து மாநில அரசுகளுடன் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் டெல்லியில் இன்று நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில், என்பிஆர் புதிய முறைக்கு பாஜக ஆட்சி செய்யாத மாநில அரசுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

ஆனால், குறிப்பிட்ட கேள்விகளுக்கு மக்கள் பதில் அளிப்பது கட்டாயமில்லை விருப்பத்தின் பெயரில் பதில் அளிக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும், என்பிஆர் விதிமுறையின்படி தவறான தகவல்களை அளிக்கும் பொதுமக்களுக்கு அதிகபட்சமாக ரூ.ஆயிரம்வரை அபராதம் விதிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் என்பிஆர் பணிகள் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன. ஆனால், குடியுரிமைத் திருத்தச்சட்டம், என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றுக்கு பாஜக ஆளாத கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

குறிப்பாகக் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்கள், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் என்பிஆர் பணிகளைத் தொடங்கமாட்டோம் எனத் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், என்பிஆர் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடவடிக்கையில் மாநிலங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், இந்தப் பணிகள் இடையூறு இன்றி, தடங்கலின்றி செல்ல வேண்டும் எனக் கோரி மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் இன்று டெல்லியில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க மாநிலங்களின் பிரதிநிதிகளான தலைமைச் செயலாளர் மற்றும் இயக்குநர்கள் பங்கேற்றனர்

டெல்லியில் உள்ள அம்பேத்கர் பவனில் இன்று நடந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சகத்தின் சார்பில் இணையமைச்சர் நித்தியானந்தா ராய், உள்துறைச் செயலாளர் அஜய் குமார் பல்லா, தேசிய பதிவாளர் தலைவர் விவேஷ் ஜோஷி ஆகியோர் பங்கேற்றனர்.

ஆனால் இந்த கூட்டத்தில் மேற்கு வங்க அரசின் சார்பில் எந்த விதமான அதிகாரியும் பங்கேற்கவில்லை. தங்கள் மாநிலத்தில் என்பிஆர் செயல்படுத்தமாட்டோம் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்ததால், எந்த அதிகாரியையும் அனுப்பி வைக்கவில்லை.
இன்று முழுவதும் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலம் உள்ளிட்ட சில மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன, என்பிஆர் திட்டத்தைச் செயல்படுத்தும் புதிய முறைக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி அதிருப்தி தெரிவித்தன.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் என்பிஆர், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படுவதன் நோக்கம், நன்மைகள் ஆகியவை குறித்து விளக்கப்பட்டது. மேலும், புதிய மொபைல் ஆப்ஸ் அறிமுகம் செய்யப்பட்டு, 2021-ம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கான 'சின்னம் அறிமுகம் செய்யப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலத்தின் தலைமைச் செயலாளர் டி.பி. குப்தா பேசுகையில், " என்பிஆர் செயல்படுத்தும்போது சில கேள்விகள் நடைமுறைக்கு ஏற்புடையதாக இல்லை. குறிப்பாகப் பெற்றோர் பிறந்த இடம், ஆண்டு குறித்த கேள்விகள் தேவையில்லை. நாட்டில் ஏராளமான மக்களுக்கு தங்களின் பெற்றோர் பிறந்த இடம், ஆண்டுகூடத் தெரியாது. என்ன காரணத்துக்காக இதுபோன்ற கேள்விகளைக் கேட்கிறார்கள் எனத் தெரியவில்லை. அந்த கேள்விகளை நீக்க வேண்டும்.

இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகளிடம் நான் கேட்டபோது, அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிப்பது கட்டாயமில்லை, எந்த கேள்விக்கும் பதில் அளிக் வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படமாட்டார்கள் இதுபோன்ற கேள்விகள் முன்பே கேட்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தைத் தொடங்கி வைத்து மத்திய உள்துறை இணையமைச்சர் ராய் பேசுகையில், " என்பிஆர் மூலம் திரட்டப்படும் தகவல்கள் மக்களுக்காக செயல்படுத்தப்பட உள்ள நலத்திட்டங்களை வகுக்க உதவும்"எனத் தெரிவித்தார்

என்பிஆர் குறித்து உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கையில், " என்பிஆர் திட்டத்தின் நோக்கம் என்பது நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகன் குறித்தும் முழுமையான விவரப் பட்டியலை உருவாக்குவதுதான். இந்த விவரத்தில் தனிமனிதரின் வாழ்விடம், பயோ-விவரங்களும் அடங்கியிருக்கும்.

குடியுரிமைச்சட்டம் 1955-ன் கீழ் இந்த என்பிஆர், தேசியம், மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், கிராமம் அளவில் தயாரிக்கப்படுகிறது. இந்த குடியுரிமை சட்டம் விதி 17-ன்கீழ் தவறான தகவல்களை அளிக்கும் மக்களுக்கு அதிகபட்சமாக ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க வழி உண்டு. கடந்த 2011, 2015-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இந்த விதிமுறையை யாரும் பயன்படுத்தவில்லை.

கடந்த 2015-ம்ஆண்டு அப்டேட் செய்யப்பட்ட விவரங்களில் ஆதார், மொபைல் எண் கேட்கப்பட்டது. இந்த முறை ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை எண், பான்கார்டு எண் ஆகியவையும் சேகரிக்கப்படும்" எனத் தெரிவித்தனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x